அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற எழுச்சி பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த அவர், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்தபின்னர், தூத்துக்குடி விவிடி சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் எல்லா விதமான கட்டணங்களும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
"சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளன. மின்சார கட்டணம் மட்டும் 67% உயர்ந்துவிட்டது. கட்டுமானப் பொருட்கள் விலை 100% உயர்ந்துவிட்டது. பிளான் அப்ரூவலுக்கான கட்டணமும் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாக உயர்ந்துள்ளது," என தெரிவித்தார்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பற்றி விமர்சித்த அவர்,
"525 அறிவிப்புகள் வெளியிட்டுள்ள திமுக அரசு, அதில் 10% கூட நிறைவேற்றவில்லை. எப்போது கேட்டாலும் ‘1000 ரூபாய் உரிமைத்தொகை கொடுத்தோம்’ என்பதையே பேசுகிறார்கள். ஆனால் அந்த தொகை 28 மாதம் கழித்து, அதிமுக போராட்டத்துக்குப் பிறகே வழங்கப்பட்டது," என்றும் கூறினார்.
தூத்துக்குடியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலையை குறிப்பிட்ட அவர்,
"இரண்டாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தில் நானே வந்தேன். முதல்வர் வரவில்லை. அவர் டெல்லியில் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இருந்தார். மக்கள் கஷ்டப்படும்போது வந்து பார்ப்பது தானே முதல்வரின் கடமை?" என்றார்.
"திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் கொண்டுவந்த திட்டங்களை ரிப்பன் வெட்டி திறக்கும் வேலை மட்டுமே நடந்தது. அதிமுக ஆட்சியில் 1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், 283 கோடியில் நான்காவது பைப் லைன் குடிநீர் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டன," என்றும் அவர் கூறினார்.
திமுக அரசு மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி,
"50 மாதங்களில் செய்ய முடியாததை 45 நாளில் செய்வதாக சொல்லுவது, தேர்தல் முன் ஓட்டுக்காக மக்களை ஏமாற்றும் நாடகம் தான். இது போலத்தான் புகார் பெட்டி என்ற திட்டம் எடுத்து மக்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார். ஆனால் அதற்கும் தீர்வு இல்லை," என்று விமர்சித்தார்.
"அடுத்த தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை அடைந்து ஆட்சி அமைக்கும்," என நம்பிக்கை தெரிவித்த அவர்,
"மக்கள் ஓட்டுக்கு முன் நினைத்து வாக்களிக்க வேண்டும். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்," என்ற கூச்சத்தை மக்களிடையே எழுப்பினார்.