நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த 37 வயதான முத்துக்குமார் மினிபஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு ஒரு மனைவி, குழந்தை இருந்தாலும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினமணியன்குடியை சேர்ந்த 30 வயதான ஜாய்ஸ் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில், ஜூலை 29ஆம் தேதி அதிகாலை, ஜாய்ஸ் தலையில் காயத்துடன் மயக்க நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஜாய்ஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். தகவல் தெரிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவரது கணவர் முத்துக்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, முத்துக்குமார் ஆரம்பத்தில் “மனைவிக்கு உடல்நிலை சரியில்லை” என கூறி போலீசாரை திசை திருப்ப முயன்றார். ஆனால் தொடர்ந்து கேட்டதற்கு முன் பேசியதை மறுப்பதுபோல முன்னும் பின்னுமாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கடைசியில் சிக்கிய முத்துக்குமார், “காதல் திருமணமாக வாழ்ந்த வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாக ஜாய்ஸின் நடத்தை குறித்து எனக்குச் சந்தேகம் எழுந்தது. அதைக் குறித்து அவளிடம் கேட்டதிலிருந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதே காரணமாக அந்த நாளும் வாக்குவாதம் முற்றி, பூரி கட்டையால் ஜாய்ஸ் தலையில் தாக்கினேன்.
அவள் விழுந்ததும் பயந்து போன் செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். ஆனால் அப்போது அவள் ஏற்கனவே இறந்துவிட்டாள்” என வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவத்தையடுத்து, முத்துக்குமாரை போலீசார் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.