தூத்துக்குடி ஆறுமுகமங்கலத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோருக்கு நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “கவினின் இறப்பிற்கு நீதிக்கிடைக்கும் வரை போராடுவோம் என்று உறுதி. கவின் சம்பவத்தில் 'சாதி' கொலை செய்துள்ளது. திருப்புவனத்தில் சட்டம் கொலை செய்துள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால் ஆணவக் கொலை செய்தவனின் கல்விச்சான்றிதழ் செல்லாது. குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் உரிமம் கிடையாது. அவன் தலைமுறைக்கு அரசு வேலை கிடையாது என அனைத்தையும் நிறுத்தி விடுவேன்.
நெல்லையில்தான் அதிகளாவில் சாதிய மோதல்கள் நடக்கிறது. மழை சாதி பார்த்து பெய்வதில்லையே. ஆனால் சாதி பார்த்து பிணத்தை புதைக்கும் நிலை தமிழகத்தில்தான் உள்ளது. இந்த சாதிக்காரன் தான் நடக்க வேண்டுமென பூமி சொல்வதில்லை. செத்தாலும் தமிழனுக்கு சாதி போகாது எனில் சமூகத்தை ஒன்றும் செய்ய முடியாது. தன்னைப் போலவே சக மனிதனை தாழ்த்தி வீழ்த்தி நான் உயர்ந்த சாதி என்று பெருமை கொள்வது மனநோய். கவினுக்கு நடந்தது போல் ஆணவப்படுகொலை பல இடங்களில் நடக்கின்றன, அரசுக்கு இதில் துளியும் அக்கறை இல்லை” என்றார்.