தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 2) முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேற்கு திசையில் வீசும் காற்றின் வேக மாற்றம் காரணமாகவே இந்த மழை வாய்ப்பு உருவாகியுள்ளது. இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆக.3-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் எனவும், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆக.4-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு உள்ளதுடன், நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.