தமிழக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களால் தொடர் பாலியல் அத்துமீறல்... தமிழக அரசுதான் பொறுப்பு - பாஜக!
Seithipunal Tamil August 02, 2025 03:48 AM

தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு தமிழக அரசு பள்ளிகளில் நடைபெற்ற மாணவிகள் மீதான ஆசிரியர்களின் பாலியல் வன்முறைகளில் ஒரு சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இதே போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளன. பல  குற்றங்கள் வெளிவந்திருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. 

1.திருவண்ணாமலையில் ஆதி திராவிடர் நல உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியர், எழுத்தர் கைது செய்யப்பட்டனர் - 31/07/2025.

2. ஊட்டி  அருகே உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அறிவியல் ஆசிரியர் கைது. - 04/07/2025.

3. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். - 6/2/2025.

4. வேப்பனப்பள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி நான்கு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பாலகிருஷ்ணன் கைது. 24/07/2025.

5. அரியலூரில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டார். 27/2/2025.

6. வாணியம்பாடி அருகே, அரசு மேல்நிலை பள்ளி மாணவியர், 6 பேருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில ஆசிரியரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர். 25/2/2025.

7. ஓமலூர் அருகே காடுகாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மானவைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது : 13/07/25.

8. சேலம் ஏற்காட்டில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக அறிவியல் ஆசிரியர் கைது. 8/2/2025.

9. மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருவாரூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரமேஷ் கைது. 20/06/2025.

10. உளுந்தூர்பேட்டை அருகே ஓலையூனூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த வழக்கில் கைது. 27/06/2025.

11. சாத்தூர் அருகே 7-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவிக்கு  பாலியல் தொல்லையளித்த அப்பள்ளி தலைமை ஆசிரியர் தலைமறைவு. 02/04/2025.

12. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள  அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் 8-ஆம் வகுப்பு சிறுமிக்கு, அதே பள்ளியில் பணியாற்றி வரும் மூன்று ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக கைது.5/2/2025.

மாதா, பிதா, குரு பின்னர் தான் தெய்வம் என்று சொல்வார்கள். ஆசிரியர்கள் வெறும் பாடத்தை போதிப்பவர்கள் மட்டும் அல்லர். ஒழுக்கத்தை, கண்ணியத்தை, நன்னடத்தையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவர்களே ஒழுக்கமின்மையாக, கண்ணியமற்று நடந்து கொள்வதற்கு காரணம் ஒழுக்க கேடான, தகுதியற்ற நியமனங்கள் தான். இதற்கு காரணம் முழுக்க முழுக்க அரசு தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. லஞ்சமும், ஊழலும் தாண்டவமாடும் கல்வித்துறையில் ஒழுக்கமான, கண்ணியமான நியமனங்களை எப்படி எதிர்பார்க்க முடியும்? 

தமிழகத்தில் கடந்த ஐம்பது வருடங்களாக சீரழிந்து போயிருக்கிறது கல்வித்துறை. தனியார் கல்வி நிலையங்களில் நிர்வாகம் திறம்பட இருப்பதால் இது போன்ற புகார்கள் பெருமளவில் எழுவதில்லை. பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் அரசியல்வாதிகளிடத்தில் இருந்தாலும் தங்களின் நிறுவனம் முறையாக இருக்க வேண்டும் என்று பல்வேறு சட்ட திட்டங்களை வகுத்து நிர்வாகத்தில் கவனம் செலுத்துபவர்கள், கல்வி அறிவு பெற்றவர்களின் புள்ளி விவரங்களை வெளியிட்டு தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது என்று மார் தட்டிக் கொண்டாலும்,  அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஏழைகள் தானே என்று அலட்சியம் காட்டுவது தான் அரசு பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலைக்கு காரணம்.

கல்வியை வியாபாரமாக்கியவர்கள், அரசு பள்ளி ஆசிரியர் பணியை காசுக்கு விற்க துவங்கியதோடு, ஏழை மக்களை நட்டாற்றில் விட்டு விட்ட கொடூரம் தான் தமிழகத்தில் ஏழை அரசு பள்ளி மாணவிகளின் நிலைக்கு காரணம்.ஒவ்வொரு தாய்மார்களின் கண்ணீரும், சாபமும்  இதற்கு காரணமானவர்களை துரத்திக் கொண்டேயிருக்கும்.

மீண்டும் சொல்கிறேன் இதற்கு முழு காரணம் பல்வேறு மாநில அரசின் நிர்வாகம் மட்டுமல்ல, அலட்சியமும் கூட! இனியாவது தகுதியின் அடிப்படையில் லஞ்சம், ஊழல்,முறைகேடு இல்லாத நியமனங்கள் நடக்கட்டும்.

இந்த பதிவிற்கு கூட என்னை பின்தொடரும் பலர், குறிப்பாக எதிர்கட்சிகளை, சித்தாந்தங்களை சார்ந்த பலர் அந்த மாநிலத்தில் இல்லையா? இந்த மாநிலத்தில் இல்லையா? என்றும், உங்கள் ஆட்சியில் நடக்கவில்லையா என்றும் தரக்குறைவாகவும் விமர்சிப்பார்கள். அவர்களுக்கும் அவர்களின் வீட்டு பிள்ளைகளுக்கும் சேர்த்து தான் என் ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் இந்த பதிவு என்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.