`தடகள போட்டிகளில் மகளிர் பிரிவில் வீராங்கனைகளுக்கு SRY மரபணு சோதனை கட்டாயம்' - தடகள கவுன்சில் முடிவு
Vikatan August 01, 2025 07:48 AM

உலகளாவிய தடகள போட்டிகளில் மகளிர் பிரிவில் போட்டியிட, வீராங்கனைகள் SRY மரபணு சோதனையில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாம் என்று உலக தடகள (World Athletics) கவுன்சில் அறிவித்துள்ளது.

2025-ம் ஆண்டுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் செப்டம்பர் 13 முதல் 21 வரை டோக்கியோவில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், இப்புதிய விதிமுறை செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SRY (Sex-determining Region Y) மரபணு என்பது Y குரோமோசோமில் அமைந்திருக்கும், ஆண் குழந்தையின் வளர்ச்சியை தூண்டும் முக்கிய மரபணுவாகும். இதுவரை, மகளிர் பிரிவில் பங்கேற்க டெஸ்டோஸ்டிரோன் அளவு 5 nmol/L கீழ் இருக்க வேண்டும் என்பது ஒரே அளவீடாக இருந்தது.

தடகள போட்டி

ஆனால், இனி SRY மரபணு சோதனையில் `பெண்' என உயிரியல் ரீதியாக உறுதி செய்யப்படும் வீராங்கனைகளுக்கு மட்டுமே சர்வதேச மகளிர் தடகள போட்டிகளில் பங்கேற்கும் உரிமை வழங்கப்படும். இந்த சோதனை வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்வதே போதுமானது எனவும் கூறப்பட்டுள்ளது.

இது கடந்த மார்ச் மாதம் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூன் 30, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக உலக தடகள கவுன்சில் தலைவர் செபாஸ்டியன் கோ, "உலக தடகள அமைப்பின் தத்துவம் என்பது, பெண்கள் விளையாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் செய்வதுதான்.

பெண்களை ஈர்க்க முயற்சிக்கும் விளையாட்டுத் துறையில், உண்மையான உயிரியல் சமத்துவம் உள்ளது எனும் நம்பிக்கையுடன் அவர்கள் பங்கேற்பது முக்கியமானது.

உயிரியல் பாலினத்தை உறுதி செய்யும் இந்த பரிசோதனை, இந்த நோக்கத்தை நிறைவேற்ற முக்கியமாகும்." என்று தெரிவித்திருக்கிறார்.

தடகள போட்டி

இந்த அறிவிப்பு, திருநங்கைகள் தடகள போட்டிகளில் பெண்கள் பிரிவில் பங்கேற்பது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கான பதிலாகப் பார்க்கப்படுகிறது .

2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் தலா ஒரு பதக்கம் வென்ற தென்னாப்பிரிக்காவின் காஸ்டர் செமென்யா உட்பட இயற்கையாக அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கொண்ட பாலின வளர்ச்சியில் வேறுபாடு (DSD) உள்ள வீராங்கனைகள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, தங்களின் ஹார்மோன் அளவுகளை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்று 2018-ல் அறிவுறுத்தப்பட்டது.

இந்த விதிமுறையை செமென்யா மறுத்ததிலிருந்து தொடங்கி, இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Kavin Honour Killing: 'யார் சொல்லி அந்தப் பொண்ணு வீடியோ வெளியிட்டுச்சு?'- Evidence Kathir Interview
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.