மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அப்பெண்ணின் பெயர் சமீரா பாதிமா என்று தெரிய வந்தது.
அவர் பல ஆண்களை திருமணம் செய்து லட்சக்கணக்கான ரூபாயை ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பெண்ணை நாக்பூர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரை ஒரு முறை போலீஸார் மடக்கினர். ஆனால் அப்போது தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். அதன் பிறகுதான் அவர் பொய் சொன்னது தெரிய வந்தது.
இதையடுத்து நீண்ட தேடுதலுக்கு பிறகு நாக்பூரில் உள்ள தேநீர் கடை ஒன்றில் வைத்து அப்பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அப்பெண்ணிடம் விசாரித்தபோது பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,''கடந்த 15 ஆண்டில் 8 ஆண்களை திருமணம் செய்து அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். அதில் ஒருவரிடம் ரூ.50 லட்சமும், மற்றொருவரிடம் ரூ.15 லட்சமும் பறித்துள்ளார். மிரட்டி பணம் பறிக்கும் கும்பலோடு கூட்டணி சேர்ந்து கொண்டு பணக்காரர்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
9வது நபரை திருமணம் செய்ய சரியான ஆள் தேடிக்கொண்டிருந்தபோது அவரை கைது செய்தோம். தனக்கு தேவையான ஆட்களை மேட்ரிமோனியல் தளம் மூலம் தேடுவதை சமீரா வழக்கமாக கொண்டிருந்தார். பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு தான் ஆதரவு இல்லாத விதவை என்றும், குழந்தையை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுவதாக கூறி அனுதாபத்தை ஏற்படுத்திக்கொள்வார்.
அதில் சிக்குபவர்களிடம் நயமாக பேசி பதிவுத்திருமணம் செய்து கொள்வது வழக்கம். பின்னர் அவர்களை மனரீதியாக சித்ரவதை செய்வது வழக்கம். இதில் ஆண்கள் பேசுவதை ரகசியமாக தனது மொபைல் போனில் பதிவு செய்து கொள்வார். அந்த உரையாடலை எடிட் செய்து தனக்கு சாதமகமாக மாற்றிக்கொள்வார். அதோடு தனது கணவர்கள் மீது துன்புறுத்தல் மற்றும் திருமணம் தாண்டிய உறவு தொடர்பாக போலீஸில் புகார் செய்வார். பின்னர் வழக்கை திரும்ப பெறுவதாக கூறி மிரட்டி பணம் வசூலிப்பது வழக்கம்.
சமீரா நன்கு படித்தவர். அவர் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். ஆனால் திருமணம் செய்து கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் தொழிலையும் சேர்த்து செய்து வந்தார்''என்று தெரிவித்தார்.
கடைசியாக குலாம் பதான் என்பவரை 2022ம் ஆண்டு திருமணம் செய்தார். அவரிடம் ரூ.10 லட்சத்திற்கு காசோலை வாங்கிக்கொண்டு அவர் மீது புகார் கொடுத்தார். இதையடுத்தே சமீராவிற்கு எதிராக குலாம் போலீஸில் புகார் கொடுத்தார். குலாமை தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெறுவதாக சமீரா தெரிவித்தார். உடனே குலாம் தனது வழக்கறிஞரிடம் இது குறித்து கலந்து ஆலோசித்தார். ஏற்கனவே அவரை போலீஸார் தேடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து இது குறித்து போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
குலாம் வழக்கை வாபஸ் பெற உயர் நீதிமன்றத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். சமீராவும் உயர் நீதிமன்றத்திற்கு வந்தார். உடனே அவரை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவருக்கு 12 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk