பா.ஜ.க கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தபோதிலும், ஓபிஎஸ்-க்குத் தொடர்ந்து முக்கியத்துவம் மறுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்க அவர் பலமுறை முயற்சி செய்தும், அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்தச்சூழலில் கடந்த வாரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் தமிழகம் வந்திருந்தார்.
முன்னதாக ஓபிஎஸ், "தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனிமரியாதையாகவும் எனக்களிக்கப்பட்ட சிறப்புரிமையாகவும் இருக்கும்" எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார்.
ஆனாலும் அவருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், 'தொடர்ச்சியாக பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைமை தங்களைப் புறக்கணிக்கிறது' என, ஓபிஎஸ் தரப்பு கொதிப்பிலிருந்தது. இதற்கிடையில்தான் பிரதமரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கொடுக்கப்பட்டது.
இதில் ஏற்கெனவே கொதிப்பிலிருந்த ஓபிஎஸ் தரப்பு மேலும் சூடானது. 'தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்' என, ஓபிஎஸ்-க்கு அவரது ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். மேலும், "தமிழக அரசியலில் நீண்ட வரலாறு கொண்டவர் ஓ.பி.எஸ். முன்னாள் முதலமைச்சரான அவரைப் புறக்கணிப்பது ஏற்கத்தக்கதல்ல. தே.ஜ. கூட்டணியில் இருக்கும் அவர், பிரதமரைச் சந்திக்க விரும்புவது இயல்பு. ஆனால், திட்டமிட்டு அவரை மட்டும் புறக்கணித்திருப்பது அரசியல் நாகரிகமற்ற செயல்," என ஓ.பி.எஸ்-ன் நெருங்கிய ஆதரவாளர்கள் பா.ஜ.க தலைவர்களை விமர்சனம் செய்தனர்.
'என் சுயமரியாதையை சோதித்துவிட்டார்கள்'இதையடுத்து சென்னையில் கடந்த 31.7.2025 அன்று பன்னீர்செல்வத்தின் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், "தே.ஜ கூட்டணியுடனான உரிமை மீட்புக் குழுவின் உறவைத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொண்டுள்ளது. ஓபிஎஸ் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இப்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்" என்றார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக அன்றையதினம் காலையில் நடைப்பயிற்சி செல்லும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார், ஓபிஎஸ். பிறகு மாலை முதல்வர் இல்லத்துக்கே நேரடியாகச் சென்று பேசினார், ஓபிஎஸ்.
அதற்கு 'இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். முதல்வரின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தேன். மு.க. முத்துவின் மறைவு பற்றியும் விசாரித்தேன். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நண்பர்களும் இல்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்" என விளக்கமளித்தார்.
தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகியது குறித்துப் பேசியவர், 'நான் கூட்டணியிலிருந்து விலகிய பிறகு பா.ஜ.க தலைவர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை. எனக்கென்று அரசியலில் சுயமரியாதை இருக்கிறது" என்றார்.
திமுக, விஜய் - அடுத்த இலக்கு எது?இதையடுத்து ஓபிஎஸ் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என உரிமை மீட்புக் குழுவின் சீனியர்கள் சிலரிடம் கேட்டோம், "அகில இந்திய பா.ஜ.க தலைக்கு அண்ணன் ஓபிஎஸ் மிகவும் உண்மையாக இருந்தார். ஆனால் அவர்கள் தொடர்ச்சியாகச் சந்திக்க மறுத்து வந்தனர். இறுதியாக முன்னாள் முதலமைச்சர் வெளிப்படையாகக் கடிதம் எழுதிய பிறகும் பிரதமர் சந்திக்க மறுத்தது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதையடுத்துதான் இனியும் பா.ஜ.க-வை நம்பி பிரயோஜனம் இல்லை என முடிவு செய்தோம்.
காரணம் அண்ணன் மனதை இந்த புறக்கணிப்பு ரொம்பவே பாதித்துவிட்டது. எனவேதான் உரிமை மீட்புக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், "என் சுயமரியாதையை ரொம்பவும் சோதித்துவிட்டார்கள்" எனக்கொதித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளும் 'உடனடியாக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்' என்றனர். பிறகுதான் விலகல் முடிவை பண்ருட்டியார் அறிவித்தார்" என வெடித்தனர்.
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து நம்மிடம் பேசிய அவருக்கு நெருக்கமான சிலர், "பா.ஜ.க-வுக்கும், எடப்பாடி தரப்புக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதில் அண்ணன் உறுதியாக இருக்கிறார். இரட்டை இலை தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே புதிய கட்சி தொடங்கினால் அது அந்த வழக்கைப் பாதிக்கும். கூடவே எடப்பாடிக்குச் சாதகமாகவும் அமைந்துவிடும். எனவே உரிமை மீட்புக்குழு அப்படியே தொடரும். தனது சட்டப்போராட்டத்தையும் நடத்தும். முதலில் நாங்கள் விஜய்யுடன் கூட்டணி வைக்கத்தான் நினைத்தோம்.
விஜய் தரப்பில் பேசியபோது 'எங்களிடம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் என நான்கு எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறோம். இப்போது நாங்கள் அப்படியே உங்களுக்கு ஆதரவு தருகிறோம். வரும் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம்' என்றோம்.
அதற்கு அவர்கள் தரப்பில் , 'வரும் ஜனவரியில் சொல்கிறோம்' என சுருக்கமாக முடித்துக்கொண்டனர். அதற்குள் அண்ணன் ஓ.பி.எஸ் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், 'ஏற்கெனவே நீங்கள் முதல்வராக இருந்திருக்கிறீர்கள். புதிதாக அரசியலுக்கு வரும் விஜய்க்காக நீங்கள் மேடையேறிப் பேச வேண்டுமா?' என நிர்வாகிகள் சிலர் கேள்வியெழுப்பினர்.
மேற்கொண்டு பேசியவர்கள், 'தமிழகத்தில் அம்மா இருந்தபோது நிலவிய அரசியல் சூழல் வேறு. இப்போது இருக்கும் அரசியல் சூழல் வேறு. எனவே நான் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால்தான் பா.ஜ.க-வுக்கும், எடப்பாடிக்கும் பதிலடி கொடுக்க முடியும். வரும் தேர்தலில் நாம் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாம்' என்றிருக்கிறார்கள்.
அதற்கு முதலில் மவுனமாக இருந்த ஓபிஎஸ் தரப்பு பிறகு 'இந்த முடிவு ஒர்கவுட் ஆகுமா பா' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு சீனியர்கள் சிலர், 'எடப்பாடிக்குப் பாடம் கற்பிக்க அதுதான் சரியான முடிவு' என்றனர். எனவேதான் முதல்வரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதோடு, அரசியலில் நிரந்திர எதிரியும் இல்லை; நிரந்திர நண்பரும் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். அதேநேரத்தில் விஜய் தரப்பையும் விட்டுவிடவில்லை" என்றனர்.
இதுகுறித்து ஓ.பி.எஸ்-ன் தேர்தல் பிரிவு செயலாளரும் வழக்கறிஞருமான ஏ.சுப்புரத்தினத்திடமே விளக்கம் கேட்டோம், "எந்தக்காலத்திலும் இனி பா.ஜ.க திரும்புவதில்லை என முடிவு செய்திருக்கிறோம். எங்களைத் துச்சமாக மதித்த எடப்பாடி, அவமானப்படுத்திய பா.ஜக-வுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அம்மா இருந்தபோது தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழல் வேறு. எனவே பா.ஜ.க, அ.தி.மு.க-வுக்கு எங்கிருந்து பதிலடி கொடுத்தால் சரியாக இருக்குமோ அங்கிருந்து பதிலடி கொடுப்போம்" என்றார் சூசகமாக.
தமிழகத்தில் தேர்தல் புயல் மிகத் தீவிரமாக வீசத்தொடங்கிவிட்டது!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சந்திக்க மறுத்த மோடி! - ஆதங்க ஓபிஎஸ்-ன் அடுத்த நகர்வு என்ன?