கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த 17 வயதான சக்தீஸ்வரன் என்கிற இளைஞர் கடந்த மே 24 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர காத்திருந்த சக்தீஸ்வரன் உடற்பயிற்சியிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
அவரின் இறப்பு தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சக்தீஸ்வரன் கடந்த சில மாதங்களாக இணையத்தில் அறிமுகமான சில திரவ உணவுமுறையைப் (டயட்) பின்பற்றி வந்ததாக அவர்களின் பெற்றோர் கூறியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடல்நலன் சார்ந்த காரணங்களுக்கான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுபவர்கள் முறையான ஆலோசனை பெற்று பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இளைஞர்களிடையே டயட் என்பதைப் பற்றிய தவறான புரிதல் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த உணவியல் நிபுணரான ரேஷ்மா அலீம். ஒரு மாதத்தில் குறைந்தது 10 பேராவது தவறான டயட் முறையால் ஏற்பட்ட சிக்கல்களுக்கான தன்னிடம் சிகிச்சைக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.
"டயட் என்பது உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதோ அல்லது குறைவாக உணவுகளை எடுப்பதோ அல்ல. முறையான டயட் என்றால் சரியான அளவில் உணவுகளை எடுத்துக் கொள்வது" எனத் தெரிவித்தார் ரேஷ்மா.
உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் குறிப்பாக உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் உடற்பயிற்சி நிபுணரான சுஜாதா.
மருத்துவ சிக்கல்கள் உள்ளவர்களுக்கு சரியாக பின்பற்றப்படாத உணவு முறையால் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் இதயநோய் நிபுணரான அசோக் குமார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நிலையான உணவுமுறை தான் ஆரோக்கியமான இயக்கத்திற்கு உகந்தது. கலோரிகள் உட்கொள்வதை நாம் நிறுத்தினால் அது ஆபத்தானது. ஏனென்றால் உடலுக்குத் தேவையான கலோரிகள் உணவு மூலம் உள் எடுப்பது குறைகிறபோது உடலில் கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கலோரிகள் செரிமானம் ஆகத் துவங்கும்."
"கார்போஹைட்ரேட்ஸ், கலோரிகள், நுண் ஊட்டச்சத்துக்கள் என அனைத்துமே சரியான அளவுகளில் கிடைக்க வேண்டும். இவைகளில் சமநிலை குறைகிறபோது தசைகள் உடைய ஆரம்பிக்கின்றன. நல்ல கொழுப்பும் சரியான அளவில் உடலில் இருக்க வேண்டும். எடை குறைக்க உடற்பயிற்சி செய்கிறபோது தசையும் குறையும்."
"இதய தசைகள் குறைகிறபோது உடலுக்கு ரத்தம் செலுத்தப்படுவது குறையும். இதனால் இதய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். ஒருவருக்கு ஏற்கெனவே மருத்துவ சிக்கல்கள் (pre-existing conditions) இருந்தால் அவை மேலும் மோசமாக்கும்." என்றார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் (ஐசிஎம்ஆர்) இயங்கும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இந்தியர்களுக்கு எவ்வளவு ஆற்றல் தேவை என்பதை வகைப்படுத்தி பரிந்துரைக்கிறது.
அதன்படி, ஆண்களில் உடல் சார்ந்த வேலைகள் (Sedentary work) அதிகம் செய்யாத பெரிய நபர்களுக்கு நாளொன்றுக்கு 2,110 கிலோ கலோரி தேவைப்படுகிறது. அதுவே, ஓரளவிற்கு உடல் சார்ந்த வேலைகள் (Moderate work) உள்ள ஆண்களுக்கு நாளொன்றுக்கு 2,710 கிலோ கலோரி தேவைப்படுகிறது. கடினமான உடல் சார்ந்த வேலைகள் (Heavy work) செய்பவர்களுக்கு நாளொன்றுக்கு 3,470 கிலோ கலோரி தேவைப்படுகிறது.
இதே பெண்களில் பெரியவர்களுக்கு முறையே 1,160, 2,130, 2,720 கிலோ கலோரி என இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அனைத்து விதமான சத்துக்களும் அடங்கியிருக்க வேண்டும் என்கிறார் ரேஷ்மா. "உடலுக்கு தேவைப்படும் சத்துகள் கார்போஹைட்ரேட், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள், புரத உணவான முட்டை அல்லது மாமிசங்கள் போன்ற பல உள்ளன. இவற்றை திரவ உணவுகளால் மட்டும் வழங்க முடியாது" என்றார்.
"பழங்களை திரவ உணவாக உட்கொள்கிற போது அதில் உள்ள நார்ச் சத்துகளும் கழிந்துவிடும். ஆகவே இதனை ஃப்ரூட் டயட் எனச் சொல்ல முடியாது. ஜூஸ் டயட் என்று தான் கூற வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
ஐசிஎம்ஆர் பரிந்துரைக்கும் அளவு
சராசரியாக பரிந்துரைக்கப்பட்ட உணவு உட்கொள்ளும் அளவு இது. உடற்பயிற்சியில் ஈடுபடுவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்குப் பொருத்து இவை மாறுபடும் என்று தெரிவித்தார் ரேஷ்மி.
இதற்கு ஒரு உதாரணத்தை முன்வைத்த சுஜாதா, தீவிர உடற்பயிற்சியில் ஈடுபவர்களுக்கு புரதச்சத்து அதிகமாக தேவைப்படும் என்பதால் அவருக்கு உணவுமுறையில் புரதங்கள் கூடுதலாக பரிந்துரைக்கப்படும் என்றார்.
மருத்துவ வட்டாரங்களில் இணையத்தைப் பார்த்து பின்பற்றும் உணவுப் பழக்கத்தை ஃபேடு டயட் (Fad diet) என்று அழைக்கப்படுகிறது.
"இரண்டு நாட்கள் திரவ ஆதாரங்களை எடுத்துக் கொண்டால் எடை சற்று குறையவே செய்யும். ஆனால் அதனால் வேறு சில சிக்கல்களும் வரும்" எனக் கூறினார் ரேஷ்மி
தொடர்ந்து விவரித்த அவர், "ஒருவரின் ஆரோக்கியமான உடல் இயக்கத்திற்கு திட உணவும், திரவ உணவு என இரண்டுமே அவசியம். திரவ உணவை மட்டுமே எடுத்துக் கொண்டால் மூளை சார்ந்த, உடல் சார்ந்த எந்த வேலைகளையும் செய்வது கடினமாக இருக்கும். திட உணவுகளை ஒருவர் எடுத்துக் கொள்ளவில்லையென்றால் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தசையின் அளவு குறைந்துவிடும். உடலுக்கு தேவையான வைட்டமின் சி அல்லது பொட்டாசியம் போன்ற சத்துகள் கிடைக்காமல் போய்விடும்." என்று தெரிவித்தார்.
ஒருவரின் உடல்நிலையைப் பொருத்து தான் அவருக்கான உணவுமுறையைப் பரிந்துரைக்க முடியும் என்கிறார் ரேஷ்மா.
"ஒருவரின் ரத்தப் பரிசோதனை, கொழுப்பு அளவு, நுரையீரல், சிறுநீரகத்தின் நிலை, அவருக்கு ஏற்கெனவே உள்ள மருத்துவ சிக்கல்கள், குடும்பத்தில் மரபணு ரீதியாக உள்ள சிக்கல்கள் போன்றவற்றை அறிந்த பிறகே அவருக்கான உணவு முறையைப் பரிந்துரைக்க முடியும்." என்றார்
ஒருவர் தனது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால் அதற்கு முறையாக பயிற்சி பெற்றவர்கள் மூலம் அறிவுரை பெறுவது தான் சிறந்தது என்றும் தெரிவித்தார்.
"மனித உடல் அமைப்பிலே திட உணவுகள் உட்கொள்வது என்பது அடிப்படையானது. திட உணவுகள் இல்லையென்றால் உடல் செரிமானம் மேற்கொள்ளாது. இதனால் உடல் திசுக்களையே செரிமானம் செய்யத் தொடங்குகிறது. அப்போது தான் குடலழற்சி போன்ற சிக்கல்கள் எழத் தொடங்குகின்றன." என்றார் அவர்.
உடற்பயிற்சி செய்பவர்கள் எவ்வாறு டயட் பின்பற்றலாம்?பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளாததைப் போல டயட்டையும் முறையான பரிந்துரை இல்லாமல் பின்பற்றக்கூடாது என்கிறார் சுஜாதா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சமூக ஊடகங்களைப் பார்த்து உணவு பழக்கங்கள், உணவு முறைகளை மாற்றிக் கொள்வது மிகவும் சிக்கலாக உள்ளது. தற்போது பலரும் இருவேளை உணவு, ஒருவேளை உணவு எனப் பின்பற்றுகிறார்கள். இதனால் பல சிக்கல்கள் எழுகின்றன. இதனுடன் சேர்ந்து தீவிர உடற்பயிற்சியும் மேற்கொள்ளும்போது சிக்கல்கள் அதிகமாகின்றன." என்று தெரிவித்தார்
தசை அளவு குறைவதன் ஆபத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், "எடையை குறைக்க உணவு உட்கொள்ளும் பழக்கத்தை மாற்றினால் உடலில் தசையின் மற்றும் கொழுப்பின் அளவும் பெருமளிவு குறைகிறது. இதில் இதய தசை குறைவது தான் மிகவும் ஆபத்தானது. அப்போது தான் இதய நோய் வருவதற்கான சிக்கல்களும் அதிகரிக்கின்றன." என்றார்.
டயட் மட்டுமல்ல ஒருவரின் உடற்பயிற்சியும் அவரின் வயது, எடை உடல்நிலை, அவரின் உடல் ஆரோக்கியம் எனப் பலவற்றைப் பொருத்து தான் பரிந்துரைக்கப்படுகிறது என்று கூறியவர், "மனிதர்களின் உடல் பரவலாக மூன்று வகைகளின் கீழ் அடங்கும். மெலிதான உடல்வாகு உடையவர்கள், சிலருக்கு உடலிலே கொழுப்பு இருக்கும், சிலருக்கு தசை அளவு கூடுதலாக இருக்கும். மரபணு ரீதியாக இதய நோய் வருகிறது என்றால் அவருக்கு கார்டியோ சார்ந்து தீவிர உடற்பயிற்சி வழங்க முடியாது. ஒருவரின் முழுமையான உடல்நிலை, அவருக்கு ஏற்கெனவே உள்ள பிரச்னைகள், குடும்பத்தில் பரம்பரை ரீதியாக உள்ள சிக்கல்களைப் பொருத்து தான் தகுந்த உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படும்." என்று தெரிவித்தார்.
ஒருவர் எதிர்கொள்ளும் அழுத்தமும் உடற்பயிற்சியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக விவரித்தவர், "ஒருவருக்கு என்ன மாதிரியான மன அழுத்தம் உள்ளது, அவரின் வேலை அழுத்தம் என்ன மாதிரி உள்ளது, எந்த அளவிற்கு ஆழமான உறக்கம் அவருக்கு கிடைக்கிறது, அவரின் தனிப்பட்ட மனநிலை, சமூக வட்டம் எப்படிப்பட்டதாக உள்ளது என அனைத்துமே இதில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு