நடிகர் மதன் பாபின் உடல் தகனம் செய்யப்பட்டது!
Top Tamil News August 04, 2025 01:48 AM


 மறைந்த நடிகர் மதன்பாபுவின் உடல் , சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.  

பிரபல நகைச்சுவை நடிகர் மதன்பாபு(71), சென்னையில் நேற்று மாலை காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி மாலை 5 மணிக்கு மறைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  சினிமாவில் நுழையும் முன்னரே ‘மதன்பாபு’ என்னும் இசைக்குழுவை நடத்திவந்த இவர், பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் நெருக்கமான நட்பில் இருந்துள்ளார்.  இவரது கச்சேரியில் கங்கை அமரன், இளையராஜா உள்ளிட்டோரும் பாடியுள்ளனர்.  அத்துடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் மதன்பாபுவிடம் தான் கி-போர்ட் கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.  


இசை மட்டுமின்றி தேவர்மகன், ஆசை, திருடாதிருடி, தித்திக்குதே, பிரியமான தோழி, காதலா காதலா, நம்மவர் , சிங்கம் 2 , பிரண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களிலும், ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களிலும்  அவர் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பது, இசைக்கச்சேரிகளை கவனிப்பதோடு கார்மெட்ஸ் பிஸினஸையும்  நடத்தி வந்தார்.  இவருக்கு சுசீலா என்கிற மனைவியும்,  அர்சித் மற்றும் ஜனனி என்கிற பிள்ளைகள் உள்ளனர்.  இந்நிலையில் மறைந்த நடிகர் மதன்பாபுவின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.  தொடர்ந்து நடிகர் மதன்பாபுவின் உடல்  சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.   
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.