தி.மு.க. கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது கூட்டணி தலைவரின் அதிகாரம் எனவும், ஓ.பன்னீர் செல்வம், தே.மு.தி.க. கூட்டணியில் சேர்ந்தால் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் மாநில பொதுச்செயலாளர் சிவபிரசாத் பராமரித்து வந்த புத்தர் சிலை உடைக்கப்பட்டது என்பது கண்டிக்கத்தக்கது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்ட அவர்மீது பொய் வழக்கு பதிக்கப்பட்டுள்ளது.
சிலையை மீண்டும் நிறுவ வேண்டும், வழக்குகள் திரும்ப பெறப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விஜயவாடாவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதே நேரத்தில்,தமிழகத்தில் பா.ஜ.க.யுடன் இணைந்த சாதிவாத அமைப்புகள் செயல்பட ஆரம்பித்த பிறகு தான் ஆணவக் கொலைகள், சமூக வன்முறைகள் அதிகரித்துள்ளன.
நெல்லை மாவட்டத்தில் கவின் எனும் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு மற்றும் உயர்நீதிமன்ற கண்காணிப்பு விசாரணை தேவை.
ஆணவக் கொலை தடுப்பு சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட வேண்டும்.பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்ட தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தமிழ்நாட்டிலும் பாஜக ஆக்கிரமிப்பு நோக்குடன் கொண்டு வர திட்டமிடப்படுகிறது.
இவற்றைப் பற்றி விரிவாக விவாதிக்க முதலமைச்சர் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணி பலவீனமா? என்பது வரம்பற்ற வாசகம் எனத் தெரிவித்த அவர்,"ஓ.பி.எஸ், தே.மு.தி.க. கூட்டணிக்கு வந்தால் எங்களுக்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை. யாரை சேர்க்க வேண்டும் என்பது கூட்டணி தலைவரின் தீர்மானம்," என தெளிவுபடுத்தினார்.