'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், தமிழகம் முழுதும் பிரசார பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ்- ஐ தன் வீட்டுக்கு வரவழைத்து விருந்து வைக்க முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தார் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன். இதனை இபிஎஸ் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், நேற்று இரவு இபிஎஸ் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு சென்றார். அங்கு மாடியில் உள்ள தனியறையில் இருவரும் தனியே ஆலோசனை நடத்தினர். கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்து நடத்தப்பட்டது. நயினார் நாகேந்திரனின் வீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் நடைபெற்ற இந்த விருந்தில், மத்திய அமைச்சர் எல். முருகன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா உள்ளிட்ட பல்வேறு பாஜக முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமியை உற்சாகமாக வரவேற்றனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், சண்முகநாதன், இசக்கி சுப்பையா, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த விருந்துக்காக, சுமார் 10,000 சதுர அடியில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு, கண்கவர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விருந்தில் 'வெஜ் சூப்', முருங்கைக்காய் சூப் உட்பட 4 வகை சூப், 9 வகை ஸ்டார்ட்டர்ஸ், 3 வகை பர்பிக்யூ, 5 வகை சாட் உணவுகள், திருநெல்வேலி அல்வா, காசி அல்வா, பலாப்பழ மைசூர்பாக் உட்பட 11 இனிப்பு வகைகள், 3 வகை போளி, 8 வகை அவித்த உணவுகள், 4 ரொட்டி வகைகள், 8 வகை அரிசி மற்றும் சிறுதானிய உணவுகள், 8 வகை சைட் டிஷ், 6 வகை பஃபே உணவுகள், 15 வகை தோசைகள், 17 வகை ஐஸ்கிரீம், 7 வகை பழச்சாறுகள் என மொத்தம் 109 வகையான உணவுகள் பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், தாமரை மற்றும் இரட்டை இலை சின்னங்களை ஒத்த வடிவத்தில் சில உணவு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விருந்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.