தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விலகுவதாக அறிவித்ததையடுத்து, "நம்மிடம் முன்பே தெரிவித்திருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்" என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அதற்கு, நயினார் நாகேந்திரனை 6 முறை அழைத்தும் பதில் இல்லை, குறுஞ்செய்தி அனுப்பியதும் ஆதாரமாக உள்ளது என ஓபிஎஸ் பதிலளித்தார்.
இதையடுத்து, "நான்தான் அவரை தொடர்புகொண்டேன், அவர் என்னை அழைக்கவில்லை" என்று நாகேந்திரன் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் துரோகம் செய்து விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "இதில் நான் நேரடியாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், எங்கள் தலைவர்கள் பொய் சொல்வார்கள் என நம்ப முடியாது. ஓபிஎஸ் தனது கருத்தை வெளிப்படையாக சொல்லலாம். பாஜக தலைவர்களை குற்றம் சாட்டுவது ஏற்க முடியாது. அவர் நிதானமாக செயல்பட வேண்டும்" என்றார்.
மேலும், "முதல்வர் மத்திய அரசை எதிர்த்து கடிதம் எழுதுவது அரசியல் யுக்தி. ஆனால் மத்திய அரசு பல நல்ல திட்டங்களை செயலில் கொண்டு வருகிறது. மக்கள் துன்பப்படும் நிலைக்கு திமுக ஆட்சி தான் காரணம்.
முன்னாள் முதல்வர், தற்போதைய முதல்வரை சந்திப்பது மரியாதையாக இருந்தாலும், அது கூட்டணி பேச்சாகும் பட்சத்தில் அது அரசியல் துரோகம். சமூக நீதியை நிலைநாட்ட திமுக ஏற்கனவே 5 முறை ஆட்சி செய்தும் முடியவில்லை; ஆணவக் கொலைகள் இன்னும் நடக்கிறது என்பது வெட்கக்கேடு" என்றும் தெரிவித்தார்.