எல்லா படுகொலைகளுக்கும் எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முழுக்க பெண்கள் பங்கேற்கிற, பெண்மையை போற்றுகிற மாநாடாக இந்த மாநாடு அமையும். போதைப்பொருள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு, எல்லா சமுதாயங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட வேண்டும் போன்ற முக்கிய தீர்மானங்கள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன. தமிழகம் முழுவதிலுமிருந்தும் பெண்கள் அதிக அளவில் பங்கேற்கவுள்ளனர். பாமக தலைவர் அன்புமணி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம். உட்கட்சிப் பிரச்சினைகளை வெளியில் அதிகமாக பேசுவதற்கில்லை. எந்த படுகொலையும் கூடாது என்பதில் பாமக உறுதியாக இருக்கிறது. எல்லா படுகொலைகளுக்கும் எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” என்றார்.