உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம், வேவ் சிட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லால்குவான் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 3.45 மணியளவில், மூன்று பேர்கள் கூட்டாக நடத்திய திருட்டு சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவு ஆகியுள்ளது. அவர்கள் ஒரு கழிவுநீர் கால்வாயின் மீது பதிக்கப்பட்டிருந்த கனமான இரும்புச் சட்டையை நள்ளிரவில் தூக்கிச்சென்று, அதை இ-ரிக்ஷாவில் ஏற்றி விட்டுசென்றனர்.
இதில் இருவர் இரும்பு சட்டையை தூக்கிக்கொண்டிருக்கும் போது, மூன்றாவது நபர் இ-ரிக்ஷாவுடன் வந்து சேர்ந்தார். உடனே மூவரும் அந்த இரும்புப் பொருளை ரிக்ஷாவில் ஏற்றிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பாரத் கேஸ் ஏஜென்சி அலுவலகம் அருகே நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த இ-ரிக்ஷாவின் எண் அடையாளத்தை மறைக்க, அதன் நம்பர் பிளேட்டில் கறுப்பு நிறம் பூசப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் வேவ் சிட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவியதால், பொதுமக்கள் காவல் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர். போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதியளித்துள்ளனர்.