ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பந்திகுய் பகுதியில் 7 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், அந்த சிறுமி வீட்டிலிருந்து திடீரென காணாமல் போன நிலையில், மாலை நேரத்தில், வீட்டிற்கு சற்று தூரத்தில் தனியாக அமர்ந்திருந்த நிலையில் பெற்றோரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்தபோது, வலி தாங்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தாள். இதைக் கண்ட பெற்றோர், உடனடியாக பந்திகுய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பரிசோதனைக்குப் பிறகு, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிறுமிக்கு பேசவோ, கேட்கவோ முடியாத நிலை இருப்பதால், விசாரணை பணிகள் சிரமமாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், குற்றவாளியை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் சமூகத்தில் கடும் வருத்தத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் நுட்பமான விசாரணையின் மூலம், குற்றவாளி விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.