புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாழ்த்துக்கு பதிலாக, "நீங்கள் நன்றாக அரசியல் செய்யுங்கள், வெற்றி உங்களுக்குத்தான்" என்று ரங்கசாமி கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்குவதற்கு முன்பே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உடன் நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் விஜய்யின் பனையூருக்கு ரங்கசாமி சென்று, அவரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரங்கசாமி, விஜய்யின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து, "நீங்கள் நன்றாக இருக்க வேண்டும், வளமாக இருக்க வேண்டும். நல்லா வாங்க, நல்லா பண்ணுங்க. உங்களுக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்" என்று வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில், 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் ரங்கசாமியின் கட்சியும், விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் இணைந்து கூட்டணியாக போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran