நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மனவேதனையில் இருந்த தந்தை ஒருவரால் தன் சொந்த குழந்தைகள் மூவரும் கொலை செய்யப்பட்டு, பின்னர் அவர் தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 36) என்பவர், வீடு கட்டும் நோக்கில் அதிகளவு பணம் கடனாக வாங்கியிருந்தார். ஆனால் அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட, அவர் கடும் மன அழுத்தத்தில் சிக்கியிருந்தார்.
இந்த நிலையில், கோவிந்தராஜ் நேற்று திடீரென மனஉளைச்சலில், தனது மூன்று மகள்களான பிரக்திஷாஸ்ரீ (வயது 9), ரித்திகாஸ்ரீ (வயது 7), தேவஸ்ரீ (வயது 3) ஆகியோரை அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஒரே குடும்பத்தில் நான்கு உயிர்கள் இழந்த இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கோவிந்தராஜ் நண்பர்களுடன் இணைந்து லாரி வாங்கியதில் 20 லட்ச ரூபாய், வீடு மறு சீரமைப்புக்கு 30 லட்சம் ரூபாய் என மொத்தம் 50 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் தனது குழந்தைகளை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டது தெய்தவந்துள்ளது.