தமிழகத்தில் மீண்டும் மின் கட்டண உயர்வு- சசிகலா கண்டனம்
Top Tamil News August 06, 2025 01:48 PM

திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.  மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைமையிலான அரசு, கடந்த நான்கரை ஆண்டுகளில் பன்மடங்கு மின்கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. திமுக தலைமையிலான அரசு தனது நிர்வாக திறமையின்மையால் மின் வாரியத்தில் ஏற்படும் இழப்புகளை சரிகட்டுவதற்கு, ஏழை, எளிய, சாமானிய மக்களின் தலையில் தாங்கமுடியாத சுமையை ஏற்றுவது மிகவும் கண்டனத்திற்குரியது. இதன்மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கும் அபாயம் இருப்பதால், மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டுமென திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 62.5 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்திய நிலையில், தற்போது ஜூலை மாதம் முதல் 3.16 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்தி தொழில்துறையினரின் வயிற்றில் அடித்துள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 4.80 என்று இருந்த மின் கட்டணம், தற்போது ஜூலை மாதம் முதல் 4.95 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, 500 யூனிட்டுக்கு மேல் 6.95 ரூபாய் இருந்த மின் கட்டணம் 7.15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, தொழிற்சாலைகளுக்கு யூனிட்டிற்கு 8 ரூபாயாக இருந்த மின் கட்டணம் 8.25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, தற்காலிக மின் இணைப்பு கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 12.85ல் இருந்து 13.25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், உயர் மின்னழுத்த சேவையை (HT Service) பயன்படுத்துகின்ற பெரிய தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிவற்றிற்கு மின் கட்டணம் யூனிட்டிற்கு 7.25 ரூபாயில் இருந்து 7.50 ரூபாயாகவும், இதர வணிக நிறுவனங்களுக்கு 9.10 ரூபாயில் இருந்து 9.40 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் 300 ரூபாயாக இருந்த நிலைக்கட்டணம் இன்றைக்கு திமுக ஆட்சியில் இரு மடங்காக ரூ.608/KVA/மாதம் என்று உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, குறைந்த மின் அழுத்த சேவையை பயன்படுத்துகின்ற சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் அனைத்து பயனாளர்களுக்கும் 30 ரூபாய் என்று இருந்த நிலைக்கட்டணத்தை இன்றைக்கு திமுக ஆட்சியில் 50 கிலோவாட் வரை மின் வசதி பெற்ற பயனாளர்களுக்கு ரூ.162 / KW எனவும், 50 முதல் 112 கிலோவாட் வரை உள்ள பயனாளர்களுக்கு ரூ.330/ KW எனவும், 112 கிலோவாட்டிற்கு மேல் உள்ள பயனாளர்களுக்கு ரூ 608/ KW என உயர்த்தி  திமுக தலைமையிலான அரசு சிறு குறு தொழில் நிறுவனங்களின் தலையில் சுமையை ஏற்றி இருக்கிறது. இது போன்று வரலாறு காணாத வகையில் வசூலிக்கப்படும் மின் கட்டண கொள்ளையை தாங்கமுடியாமல் தமிழகத்தில் இன்றைக்கு எண்ணற்ற சிறு குறு நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கி விட்டது. 

திமுக தலைமையிலான அரசு கடந்த முறை, மின்சார கட்டணம் மற்றும் நிலை கட்டணம் ஆகியவற்றினை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழில்துறையினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், திமுக தலைமையிலான விளம்பர அரசு இந்தாண்டும் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தி தொழில்துறையை மீட்டெடுக்க முடியாத வகையில் மிகப்பெரிய அழிவுப்பாதைக்கு அழைத்து செல்கிறது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, பிற மாநிலங்களை விட அதிகமாக உள்ளதாகவும், இதனால், தமிழகத்தில் தொழில் செய்வதற்கான செலவு பன்மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லி சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் மிகவும் வேதனைப்படுகிறார்கள். மேலும் இந்த மின் கட்டண உயர்வு, தொழில்துறையின் உற்பத்தி செலவை அதிகரிக்கும், இதனால், தொழில் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதில் மிகவும் சிரமப்பட நேரிடும். குறிப்பாக, ஜவுளித் தொழில் போன்ற மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் தொழில்களில், இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் மிகுந்த வேதனைப்படுகின்றனர். நமது அண்டை மாநிலங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துவரும் நிலையில், திமுக தலைமையிலான அரசோ அதற்கு நேர்மாறாக தொழில்முனைவோர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. உலக முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் திமுக தலைமையிலான அரசு உள்ளூர் முதலீடுகளைத் தக்க வைக்க போதுமான கவனத்தைச் செலுத்த தவறிவிட்டது.

திமுக தலைமையிலான அரசால் எந்தவித மின் உற்பத்தி திட்டங்களையும் ஏற்படுத்த முடியவில்லை. ஏற்கனவே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட உடன்குடி, எர்ணாவூர் அனல்மின் நிலைய திட்டங்களை இந்த ஆட்சியாளர்களால் விரைவில் பூர்த்திசெய்து அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் முடியவில்லை. திமுக தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையால் தற்போது மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வெளியிலிருந்து வாங்குவதால் மின் வாரியத்திற்கு மேலும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக மின் வாரியத்திற்கு தற்போதும்  ரூபாய் 1,60,000 கோடி அளவுக்கு கடன் இருப்பதாக தெரிய வருகிறது. இது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி முடியும்வரை மின் வாரியம் அதன் சரிவிலிருந்து மீளவே முடியாது என்பது நிரூபணம் ஆகிவிட்டது. திமுக தலைமையிலான அரசு தனது ஆட்சிக்காலம் முடிவதற்குள் எந்தெந்த வழிகளில் திமுகவினர் பயனடையமுடியும் என சிந்தித்து அதற்கான வேலைகளை தற்போது செய்துவருவதாக பொதுமக்கள் கருதுகின்றனர். அதாவது தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, 1,500 மெகா வாட் மின்சாரத்தை ஐந்து ஆண்டுகளுக்கு, 24 மணி நேரமும் கொள்முதல் செய்வதற்கு மின் வாரியம், தற்போது 'டெண்டர்' கோரியுள்ளது. இதனால் யூனிட்டிற்கு, 5 ரூபாய் என வைத்துக்கொண்டாலும் 32,400 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு செலவாகும்.

இந்த நிதியில், மின் வாரியம் சொந்தமாக சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் நிலையங்களை அமைத்தால், 25 ஆண்டுகளுக்கு மேல் மின்சாரம் பெறலாம். இதை செய்யாமல், தனியாரிடம் மின்சாரம் வாங்கவே திமுக தலைமையிலான அரசு ஆர்வம் காட்டுகிறது. கடந்த 2006 முதல் 2011 வரை நடைபெற்ற அன்றைய மைனாரிட்டி திமுக ஆட்சிக்காலத்தில், இதேபோன்று மின் வாரியத்தை சீரழித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. அதன் காரணமாக அன்றைய திமுக ஆட்சியில் இருந்த துறை அமைச்சரே, "மின் வெட்டு துறை அமைச்சர்" என்று பெயரெடுத்ததையும் யாராலும் மறந்துவிட முடியாது. ஆனால் அதே சமயம் அடுத்து ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது நிர்வாக திறமையால் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியதையும், அண்டை மாநிலங்களுக்கு தேவையான மின்சாரத்தை விநியோகம் செய்ததையும் இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதுபோன்ற நடவடிக்கைளை திமுக ஆட்சியாளர்களால் ஏன் செய்ய முடியவில்லை. ஆனால், அடுத்து அமைய இருக்கும் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் தமிழகம் மீண்டும் மின்மிகை மாநிலமாக மாறும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். மின் தடங்கள்,  மின் மாற்றிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் மின் இழப்பு அதிகமாகிறது. இவற்றையெல்லாம் சரி செய்தாலே எவ்வளவோ மின்சாரத்தை நம்மால் சேமிக்க முடியும். ஆனால், திமுக தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடுகளால், திறமையின்மையால் இன்றைக்கு தமிழக மக்களின் தலையில் தாங்கமுடியாத சுமையை ஏற்றி இருக்கிறது. இதற்கெல்லாம் ஆட்சிமாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். எனவே திமுக தலைமையிலான கூட்டணிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.