மக்கள் செல்லப்பிராணிகளை தானமாக வழங்குமாறு டென்மார்க்கில் உள்ள ஒரு காட்டுயிர் சரணாலயம் கேட்டுள்ளது. அவைகள் சரணாலயத்தில் உள்ள வேட்டை விலங்குகளுக்கு உணவாக கொடுக்கப்படும்.
கோழிகள், முயல்கள் மற்றும் கினிப் பன்றிகளை நன்கொடையாகக் கேட்டுள்ளது. அவை பயிற்சி பெற்ற ஊழியர்களால் வலியின்றி கொல்லப்படும்.
உயிருள்ள குதிரையை தானமாக வழங்கினால், வரிச் சலுகைக்கூட கிடைக்கும். ஆனால் குதிரைக்கு பாஸ்போர்ட் (Horse passport) இருக்க வேண்டும்.
இவ்வாறு வழங்கப்படும் உணவு "காடுகளில் இயற்கையாக வேட்டையாடுவதை விலங்குகளுக்கு நினைவூட்டுகிறது" என காட்டுயிர் சரணாலயம் கூறுகிறது.
இங்கு சிங்கங்கள் மற்றும் புலிகளும் வசிக்கின்றன. வார நாட்களில் சிறிய விலங்குகளை தானம் செய்யலாம், ஆனால் முன்பதிவு இல்லாமல் ஒரே நேரத்தில் நான்கு விலங்குகளுக்கு மேல் தானம் செய்ய முடியாது.
ஆல்போர்க் காட்டுயிர் சரணாலயத்தின் வலைத்தளத்தில், ஒரு புலி இறைச்சியை விழுங்கும் படத்தின் கீழ், குதிரைகளை தானம் செய்வதற்கான நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குதிரையை தானம் செய்பவர்களிடம் குதிரை பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்பது விதி. மேலும் தானம் செய்வதற்கு முந்தைய 30 நாட்களுக்குள் குதிரை எந்தவிதமான நோய்க்கும் சிகிச்சை பெற்றிருக்கக்கூடாது, அதாவது தானமாக கொடுக்கப்படும் குதிரைக்கு அண்மையில் நோய் பாதிப்பு அல்லது மருந்துகளின் தாக்கம் இருக்கக்கூடாது.
தங்கள் விலங்குகளை தானம் தருபவர்கள் வரி விலக்கு பெறலாம்.
ஆல்போர்க் காட்டுயிர் சரணாலயத்தின் துணை இயக்குநர் பியா நீல்சன் வெளியிட்ட அறிக்கையில், மிருகக்காட்சி சாலையின் மாமிச உண்ணிகளுக்கு "பல ஆண்டுகளாக" சிறிய கால்நடைகளை உணவாக அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
"மாமிச உண்ணிகளை வைத்திருக்கும்போது, முடிந்தவரை அவற்றுக்கு இயற்கையான உணவைக் கொடுக்கவேண்டும். அதற்கு, ரோமம், எலும்புகள் போன்றவற்றுடன் கூடிய இறைச்சி சிறந்தது" என்று அவர் விளக்கினார்.
"பல்வேறு காரணங்களுக்காக கருணைக் கொலை செய்யப்பட வேண்டிய விலங்குகளை இந்த வழியில் பயன்படுத்த அனுமதிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. டென்மார்க்கில், இந்த நடைமுறை பொதுவானது, மேலும் எங்களுடைய விருந்தினர்கள் மற்றும் கூட்டாளர்கள் பலரும் பங்களிக்கும் வாய்ப்பு கிடைப்பதை பாராட்டுகிறார்கள். நன்கொடைகளாக கோழிகள், முயல்கள், கினிப் பன்றிகள் மற்றும் குதிரைகள் என கால்நடைகளை நாங்கள் பெற்றுக் கொள்கிறோம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு