உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாப்பூரில், கர்க்முக்தேஷ்வர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியின் பழைய கட்டிடம் திங்கள்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்தது. சம்பவத்தின் போது, அந்த வழியாக நடந்து சென்ற வயதான பெண் ஒருவர் சில வினாடிகளில் அந்த இடத்தை கடந்து செல்வதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த பயங்கரமான நிகழ்வு அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. அந்த சிசிடிவி காட்சியில், மூதாட்டி ஒருவர் சாலையை கடந்து கட்டிடம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னாலேயே கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழும் காட்சியைப் பார்க்க முடிகிறது.
அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் கட்டிடத்தில் மாணவர்கள் யாரும் இல்லை என்பதாலும் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பவம் ஆகஸ்ட் 4ம் தேதி மாலை சுமார் 5.55 மணியளவில் நிகழ்ந்தது. உடனடியாக மக்கள் விரைந்து வந்து அந்த இடத்தில் குவிந்தனர். சம்பவத்தை அடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதுபோல், கடந்த மாதம் ஹாப்பூரில் உள்ள மற்றொரு அரசு பள்ளியின் கூரையிலிருந்து பிளாஸ்டர் விழுந்து மூன்று மாணவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பள்ளி கட்டிடங்களில் ஏற்படும் பழுதுகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் நிலையில், பள்ளி கட்டிடங்களை பராமரிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.