குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டம் தலாஜா அருகே உள்ள பாம்போர் கிராமத்தில் பரபரப்பான காட்சி ஒன்று பதிவாகியுள்ளது. கிர் தேசிய பூங்கா அருகே, சிங்கம் ஒன்றின் அருகே ஒரு இளைஞர் செல்போனில் வீடியோ எடுக்க முயற்சி செய்தார். அந்த நேரத்தில், சிங்கம் தனது இரையை உண்ணிக் கொண்டிருந்தது.
இளைஞர் மிக அருகே சென்றதும், சிங்கம் திடீரென கர்ஜித்து, அவரை நோக்கி ஓடியது. பயந்த இளைஞர் உடனே ஓடினார். அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு சிங்கத்தின் கவனத்தைத் திருப்பியதால், அந்த இளைஞன் உயிர் தப்பியுள்ளார்.
இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இளைஞரின் செயலுக்கு பலரும் கடுமையாக எதிர்வினையளித்து வருகின்றனர்.
“இது துணிச்சல் அல்ல, முட்டாள்தனம்”, “இது வனவிலங்குகளின் அமைதியையும், உயிரையும் அபாயத்தில் இட்ட செயல்” என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இப்படி வீடியோவுக்காக விலங்குகளை தொந்தரவு செய்வது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகவே இருக்கிறது என நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், வனவிலங்குகளை அச்சுறுத்துவது மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறுவது சட்டப்படி குற்றமாகும் என்பதையும் பலர் நினைவூட்டியுள்ளனர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளை தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக வலைதளங்கள் வாயிலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.