சென்னை: அதிமுக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை! அதிர்ச்சி சிசிடிவி கட்சி! காவல்துறையின் மெத்தனம் - பாஜக!
Seithipunal Tamil August 08, 2025 08:48 AM

பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை டி.பி.சத்திரத்தில் ராஜ்குமார் என்ற நபரை சிலர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 

ஏனெனில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பட்ட பகலிலேயே தெருக்களில் அன்றாடம் நடைபெறும் இது போன்ற படுகொலைகள் மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை உணர்த்துவதால் வியப்பளிக்கவில்லை. 

காவல்துறையின் மெத்தனத்தை, அரசு இயந்திரத்தின் இயலாமையை தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறது. தனிப்பட்ட விரோதம் தான் இப்படுகொலைக்கு காரணம் என்று சொல்லி ஒவ்வொரு படுகொலைகளையும் கடந்து போய் விட துடிக்கிறது திராவிட மாடல் திமுக அரசு. ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்த பின்னர் குற்றவாளிகளை பிடித்து விட்டோம் என்று சொல்லி விவகாரத்தை முடித்து விடுகின்றனர். 

ஆனால், குற்றங்கள் நிகழாது தடுக்க தான் காவல் துறைக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மறந்து விட்டதா காவல் துறை? 

காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காமல் அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பு என்ற பெயரில் தொடர்ந்து அரசியலுக்காக பயன்படுத்துவதும், எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கும் பயன்படுத்துவதினால் தான் சமூக விரோதிகள், ரௌடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. 

சட்ட ஒழுங்கை பராமரிப்பதும், குற்றங்கள் நிகழா வண்ணம் தடுப்பதும் தான் காவல்துறையின் கடமை என்பதை இந்த  திராவிட மாடல் அரசு நிர்வாகம் உணருமா?" என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.