கர்நாடகா வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் என மோசடி நடந்ததாகவும், தகுதி வாய்ந்தவர்கள் நீக்கப்பட்டதுடன், தகுதி இல்லாதவர்களும் சேர்க்கப்பட்டதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தி இருந்தார். இதற்கு இந்திய தேர்தல் ஆணையகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் ராகுலை உறுதிப்படுமாறு கோரிக்கையும் வைத்துள்ளது.
இந்நிலையில், டில்லியில் உள்ள ராகுலின் இல்லத்தில், 'இண்டி' கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா,காங்கிரஸ் தலைவர் கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்பி திருச்சி சிவா, திரிணமுல் காங்கிரசின் அபிஷேக் பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகாய் குறிப்பிடுகையில், இண்டி கூட்டணி தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களை தனது வீட்டுக்கு ராகுல் கலந்துரையாட அழைப்பு விடுத்தார். இதில் 24 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். இதன்போது நேர்மறையான சூழலில் பேச்சுவார்த்தை நடந்தது என்றும், பொது மக்களின் நலன் மற்றும் தேச நலன் சார்ந்து பாராளுமன்றத்தில் அரசை கேள்வி எழுப்பப்பட்டது குறித்து கலந்துரையாடல் நடந்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், போலி வாக்காளர் பட்டியல் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் பேசினார். பல்வேறு கட்சி தலைவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். இது குறித்தும் கலந்துரையாடப்பட்டது என்றும், பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டிய ஆதாரங்களை இங்கு ராகுல் பகிர்ந்து கொண்டார் என்றும் பேசியுள்ளார்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டம் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி .ராஜா கூறியதாவது:
வரும் 11-ஆம் தேதி தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி பாராளுமன்றத்தில் இருந்து பேரணி நடக்கும் என தெரிவித்துள்ளார். இந்த இண்டி கூட்டணி தலைவர்கள் கூட்டத்துக்கு ராகுல் முதல்முறையாக அழைப்பு விடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூட்டணி கட்சி தலைவர்களுடன் நடந்த கலந்துரையாடியதை வரவேற்கிறதாகவும், இன்றைய கூட்டம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி, தேர்தல் கமிஷன் செயல்பாடு, வாக்காளர் பட்டியலில் நடக்கும் குளறுபடிகள் குறித்து கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் நடந்த குளறுபடிகள் குறித்து ராகுல் விளக்கியதாகவும், பீஹாரில் இன்று நடந்தது, நாடு முழுதும் நடக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது தீவிரமான விஷயம். நாட்டின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட சவால் என்று இதனை கேட்ட இண்டி கூட்டணி தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்றும் பேசியுள்ளார்.