கனடாவில் பதற்றம்: இந்திய காமெடி நடிகர் உணவகத்தில் மீண்டும் துப்பாக்கிசூடு: ஒரே மாதத்தில் 02 வது முறை..?
Seithipunal Tamil August 08, 2025 08:48 AM

ஹிந்தி திரையுலகின் காமெடி நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான கனடாவில் உள்ள கப்ஸ் கேப் என்ற உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஒரு மாத இடைவெளியில் 02-வது முறையாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கபில் சர்மா பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். நகைச்சுவை நடிகர் மற்றுமன்றி, டிவி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என் பன்முகம் கொண்டவர். இவரது ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளான தி கபில் ஷர்மா ஷோ மற்றும் காமெடி நைட்ஸ்வித் கபில் ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே என்னுமிடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிதாக கப்ஸ் கேப் என்ற உணவகத்தை கபில் சர்மா திறந்துள்ளார். இந்த உணகவம் மீது கடந்த ஜூலை-09 ஆம் தேதி மர்ம நபர் 09 முறை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி இருந்தான். அதிர்ஷ்டவசமாக அங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய இந்தியாவால் தேடப்பட்டு வரும் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜீத் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளான். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து  கனடா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மூடப்பட்ட இந்த உணவகம், மீண்டும் கடந்த மாதம் 20-ஆம் தேதி திறக்கப்பட்டது. அங்கு போலீசார்  வந்து உணவருந்திவிட்டு சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கபில் சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து போலீசுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து ஒரு மாதமே ஆன நிலையில், மீண்டும் மர்ம நபர்கள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். 25 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவத்திலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இன்று நடந்த சம்பவத்துக்கு கேங்ஸ்டார் லாரன்ஸ் பிஷ்னாயுடன் தொடர்புடைய கோல்டி தில்லான் என்பவன் பொறுப்பு ஏற்றுள்ளான். இது குறித்து ஆன்லைனில் அவன் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.