ராகுலின் அபத்தமான குற்றச்சாட்டுகள் இந்திய குடிமக்களை தவறாக வழிநடத்துகிறது: தேர்தல் ஆணையகம்..!
Seithipunal Tamil August 08, 2025 08:48 AM

கர்நாடக வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்ததாக ராகுல் குற்றம்சாட்டி இருந்தார். அதன்படி ராகுலில் குற்றச்சாட்டு உறுதியாக இருந்தால், உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு கர்நாடக தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும் என தலைமைத் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, டில்லியில் நிருபர்களைச் சந்தித்த போது வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டி இருந்தார். அத்துடன், கர்நாடக வாக்காளர் பட்டியலில், போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் என மோசடி நடந்துள்ளதாகவும், பாஜவுடன் இணைந்து தேர்தல் கமிஷன் போலியான நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கிறது எனவும் குற்றம் சுமத்தினார். 

இது தொடர்பாக தேர்தல் கமிஷன் தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது: 

ராகுல் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், அவர், 1960-ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவு சட்டத்தின் விதிகள் 20(3)(b)ன் கீழ், உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து போட்டு, அதனை இன்று மாலைக்குள் கர்நாடகாவின் தலைமை வாக்காளர் பட்டியல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஒரு வேளை தனது குற்றச்சாட்டுகளில் ராகுலுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அபத்தமான முடிவுகளுக்கு வருவதையும், இந்திய குடிமக்களை தவறாக வழிநடத்துவதையும் நிறுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ராகுல் அளிக்க வேண்டிய உறுதிமொழி பத்திரத்தையும் இணைத்துள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.