இயக்குனர் தங்கர் பச்சான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மாணவர் சேர்க்கை இல்லை என்று கூறி 207 அரசுப் பள்ளிகள் மூடப்படும் செய்தியை உங்களால் எளிதாக கடந்து சென்றுவிட முடிகிறதா?
கடந்த சில ஆண்டுகளாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகின்றன. இப்போது மொத்தமுள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52.75 லட்சம் மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். ஆனால்,அதைவிடவும் அதிகமாக 12,970 தனியார் பள்ளிகளில் 63.42 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கான தீர்வு,அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையை மக்களிடையே அரசு ஏற்படுத்த வேண்டுமே தவிர பள்ளிகளை மூடும் வேலையை தொடர்ந்து அரசு செய்வதல்ல.
தமிழக அரசு நடத்தும் கல்லூரிகளில் 91 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் இல்லாமல்,90 கல்லூரிகளில் முதல்வரே இல்லாமல் தான் சிறப்பான கல்வியை ஏழை எளிய மக்களுக்கு திமுக திராவிட மாடல் அரசு அளித்து வரும் செய்தியை அறிந்திருப்பீர்கள்!
இத்தகைய சூழலில், அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு சேர்ப்பார்கள்?
அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமித்து, உள்ளூர் மக்களிடம் பரப்புரை செய்து மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மாணவர்கள் இல்லை என்று கூறி பள்ளிகளை மூடிவிடலாமா?
அனைத்து துறைகளிலும் சமூக பங்களிப்பை செய்த அறிஞர்கள், சிந்தனையாளர்கள்,எழுத்தாளர்கள், அரசியலாளர்கள், அறிவியலாளர்கள் போன்ற அனைவருமே அரசுப் பள்ளிகளில்,அரசு கல்லூரிகளில் பயின்றவர்கள் தான்!
இந்த கொடுஞ்செயலைச் செய்யும் திமுக அரசு தயவுகூர்ந்து பெரியார், அண்ணா படங்களை பயன்படுத்தி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.