கவின் கொலை வழக்கு : சம்பவ இடத்தில் நடித்து காட்டிய சுர்ஜித்
TV9 Tamil News August 14, 2025 12:48 AM

தூத்துக்குடி (Thoothukudi) மாவட்டத்தை சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், தான் காதலித்து வந்த பெண்ணின் தம்பியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவின் மாற்று சமூகத்தை சார்ந்தவர் என்ற காரணத்தால் சுர்ஜித் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார் என்ற தகவல் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கொலை செய்த பிறகு, சுர்ஜித் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் சுர்ஜித்துடன் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுர்ஜித்தின் பெற்றோர்கள் காவல்துறையில் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிபிசிஐடி (CBCID) காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ நடந்த இடத்தில் போலீஸார் முன்னிலையில் தான் கொலை செய்த விதம் குறித்து சுர்ஜித் நடித்து காட்டினார்.

சம்பவம் நடந்த இடத்தில் நடித்து காட்டிய சுர்ஜித்

இந்த வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் இருந்த நிலையில் இருவரையும் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதன் படி இருவரையும் இரண்டு நாட்கள் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் தான் கொலை செய்த விதம் குறித்து சுர்ஜித் சிபிசிஐடி காவல்துறையினர் முன்னிலையில் நடித்துக் காட்சினார். அப்போது போலீசார் தங்கள் செல்போன் கேமராவில் இதனை வீடியோ எடுத்தனர். அப்போது சுர்ஜித் தன் முகத்தை மூடியபடி இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

சுர்ஜித்தின் பெற்றோர்களுக்கு தொடர்பா?

தற்போது சுர்ஜித் மற்றும் அவரது தந்தையிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கவின் கொலை செய்ப்படவிருப்பது சுர்ஜித்தின் பெற்றோருக்கு முன்பே தெரியுமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கொலை நடந்த இடத்தில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் இடையே தொலைபேசி உரையாடல் இருந்ததா என்றும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆணவ படுகொலைகள் அதிகரித்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை தடுக்க சிறப்பு சட்டப்பட வேண்டும் என அரசுக்கு நீலம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கைவிடுத்து வருகின்றன. இது தொடர்பாக பள்ளிகளில் இருந்தே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.