ஆளுநர் தேநீர் விருந்து: "வழக்கம் போல அழைத்தார்; வழக்கம் போலப் பங்கேற்க மாட்டோம்" - திருமாவளவன்
Vikatan August 14, 2025 02:48 AM

சுதந்திர தினம், குடியரசு தினம், பொங்கல் பண்டிகையின்போது ஆளுங்கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஆளுநர் தரப்பிலிருந்து தேநீர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு ஆண்டுதோறும் அழைப்பு விடுக்கப்படும்.

ஆனால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது, அரசு நிகழ்ச்சிகளில் இந்துத்துவா கருத்துக்களைப் பரப்புவது, திராவிட சித்தாந்தத்துக்கு எதிராகப் பேசுவது என ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளால் ஆளுநர் தேநீர் விருந்தை தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகின்றன.

இருப்பினும், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தைப் புறக்கணித்தபோதும், முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உட்பட தி.மு.க அமைச்சர்கள் அதில் பங்கேற்றனர்.

ஆளுநர் ரவி

அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரியில் குடியரசு தின ஆளுநர் தேநீர் விருந்தை தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தன.

இவ்வாறான சூழலில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு, வழக்கம் போல அரசியல் கட்சிகளுக்குத் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் அதனைப் புறக்கணித்திருக்கிறது.

இந்த நிலையில், காங்கிரஸைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "வழக்கம்போல மேதகு ஆளுநர் அவர்கள் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கும்படி வி.சி.க-வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்காக அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் வழக்கம்போல அவ்விழாவில் வி.சி.க பங்கேற்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அறிவித்திருக்கிறார்.

`சிபிசிஐடி விசாரிக்கக் கூடாது; போலீஸுக்கு அடிப்படை அறிவு இல்லையா?’ - கவின்குமார் விவகாரத்தில் திருமா Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.