சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று சன் டிவி அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்காக ‘கூலி’ ஸ்பெஷல் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு, அவர் நேரில் பார்த்துள்ளார். படத்தை ரசித்த முதல்வர், படக்குழுவினரை மனதாரப் பாராட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் நன்றி பதிவு – சமூக வலைதளங்களில் வைரல்
படத்தின் ஸ்பெஷல் காட்சிக்குப் பின், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள். ‘கூலி’ படத்திற்காக அவர் கொடுத்த அன்பிற்கும், வாழ்த்திற்கும் நன்றி” என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் அளவில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. இதற்கு முன்பு, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ‘கூலி’ படத்தைப் பார்த்து, மாஸ் எண்டர்டெயினராக மிகச்சிறப்பாக வந்துள்ளதாகவும், ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
‘கூலி’ ஹைப் – முதல் காட்சியிலேயே ரசிகர்களின் அதிரடி
‘கூலி’ திரைப்படம் இன்று காலை 9 மணிக்குத் தமிழகத்தில் திரையிடப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில், அதிகாலை 6 மணியில் இருந்தே திரையிடப்பட்டு வருகிறது. இதனால், தமிழக ரசிகர்கள் பலர் அண்டை மாநிலங்களுக்கு சென்று முதல் காட்சியை ரசித்துள்ளனர். வின்டேஜ் ரஜினி லுக்கில் வெளியாகிய புதிய போஸ்டர் ரசிகர்களை ஆடவைத்துள்ளது. ஆன்லைன் முன்பதிவில் ₹100 கோடி வரை விற்பனை சாதனை படைத்துள்ள இந்த படம், உலகளவில் மிகப்பெரிய ‘கூலி ஃபீவர்’ ஏற்படுத்தியுள்ளது.
‘கூலி’ மாஸ் எண்டர்டெயினராக மிகச்சிறப்பாக வந்திருக்கிறது: உதயநிதி ஸ்டாலின்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் மாஸ் எண்டர்டெயினராக மிகச்சிறப்பாக வந்துள்ளதாகவும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்தை வாழ்த்தி மகிழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது எக்ஸ் தள பதிவில், “கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள ரஜினிகாந்த், இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். நாளை வெளியாகும் ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.