இந்தியாவில் உள்ள சிறு வணிக உரிமையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தில் இந்திய அரசாங்கத்தால் 22 ஜூலை 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தேசிய ஓய்வூதியத் திட்டமே 'பிரதான் மந்திரி லகு வியாபாரி மான் தன் யோஜனா திட்டம்'.
இது ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், வயதான காலத்தில், அவர்களின் செலவுகளை சமாளிப்பதற்காக தகுதியுள்ள சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு 60 வயதை எட்டும்போது, மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme for Traders and Self Employed Persons) என்ற மற்றொரு பெயரும் உண்டு.
சில்லறை விற்பனையாளர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு 60 வயதை எட்டிய பிறகு, மாதந்தோறும் ஒரு நிலையான நிதியை வழங்கி, அவர்களின் வயதான காலத்தில் ஒரு பாதுகாப்பு வலையை உருவாக்க வேண்டும் என்பதே பிரதான் மந்திரி லகு வியாபாரி மான் தன் யோஜனா திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.
நிலையான ஓய்வூதியம்: இந்த திட்டத்தின் கீழ், சில்லறை விற்பனையாளர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு 60 வயது ஆன பிறகு, மாதந்தோறும் ஒரு நிலையான ஓய்வூதியமாக ரூ.3000 வழங்கப்படுகிறது.
தன்னார்வத் திட்டம்: சில கட்டாயத் திட்டங்களை போல் இல்லாமல், பிரதம மந்திரி லகு வியாபாரி மான் தன் யோஜனா திட்டத்தில் பங்கேற்பது முற்றிலும் தன்னார்வமானது.
பங்களிப்பு அடிப்படையிலான திட்டம்: இது ஒரு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்பதால், வயதை பொறுத்து, ஓய்வு பெறும் தேதி வரை, அதாவது 60 வயதை அடையும் வரை, பயனாளி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியது இருக்கும். மேலும், பயனாளி தங்களுடைய பங்களிப்பை காலாண்டு, அரையாண்டு, ஆண்டு அடிப்படையில் செலுத்தும் விருப்பத்தேர்வும் உள்ளது.
அரசாங்கத்தின் சம பங்களிப்பு: பயனாளிகள் இந்த ஓய்வூதிய நிதிக்கு செலுத்தும் தொகைக்கு சமமான தொகையை மத்திய அரசு வழங்குகிறது. இந்த தொகை பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதனால், பயனாளியின் முதலீடு இரட்டிப்பாகிறது.
குடும்ப ஓய்வூதியம்: 60 வயது நிறைவடைந்த பிறகு பயனாளி இறந்துவிட்டால், அவரது மனைவிக்கு பயனாளி பெற்று வந்த தொகையில் 50 சமமான குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும், அதாவது குடும்ப ஓய்வூதியமாக மாதத்திற்கு ரூ.1500 மனைவி அல்லது கணவருக்கு வழங்கப்படும்.
இது மனைவி அல்லது கணவன் ஏற்கனவே திட்டத்தின் பயனாளியாக இல்லாமல் இருந்தால் மட்டுமே பொருந்தும். வாழ்க்கைத் துணை இல்லையென்றால், மொத்த பங்களிப்பும், வட்டியுடன் சேர்த்து நாமினுக்கு மட்டுமே வழங்கப்படும். குழந்தைகள், பெற்றோர் அல்லது பிற உறவினர்கள் என்ற வாரிசு அடிப்படையில் வழங்கப்படாது.
மீண்டும் திட்டத்தை தொடரலாம்: திட்டத்தின் முதிர்வு தேதிக்கு முன்பாகவே, அதாவது 60 வயதிற்குள் பயனாளி இறந்துவிட்டால், அவரது மனைவி மீதமுள்ள வயது வரை மீதமுள்ள பங்களிப்புகளைச் செலுத்துவதன் மூலம் திட்டத்தை தொடரலாம். ஒருவேளை, மனைவி திட்டத்தை தொடர விரும்பவில்லை என்றால், பயனாளி செலுத்திய மொத்த பங்களிப்பும் வட்டியுடன் சேர்த்து மனைவிக்கு வழங்கப்படும்.
பிஎம் லகு வியாபாரி மான் தன் திட்டத்தின் மாதாந்திர பங்களிப்பு அட்டவணை
இந்த திட்டத்தில் சேரும் போது வியாபாரியின் எண்ட்ரி வயதைப் பொறுத்து மாதாந்திர பங்களிப்பை செலுத்த வேண்டும். வியாபாரியின் மாதாந்திர பங்களிப்புக்கு சமமான பங்களிப்பை மத்திய அரசும் செலுத்தும். இதனால், முதலீடு இரட்டிப்பாகிறது. கீழ்காணும் அட்டவணை வைத்து பயனாளி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
எண்ட்ரி வயது | ஓய்வூதியம் பெறும் வயது | பயனாளியின் மாதாந்திர பங்களிப்பு | மத்திய அரசின் மாதாந்திர பங்களிப்பு | மொத்த மாதாந்திர பங்களிப்பு |
18 | 60 | 55 | 55 | 110 |
19 | 60 | 58 | 58 | 116 |
20 | 60 | 61 | 61 | 122 |
21 | 60 | 64 | 64 | 128 |
22 | 60 | 68 | 68 | 136 |
23 | 60 | 72 | 72 | 144 |
24 | 60 | 76 | 76 | 152 |
25 | 60 | 80 | 80 | 160 |
26 | 60 | 85 | 85 | 170 |
27 | 60 | 90 | 90 | 180 |
28 | 60 | 95 | 95 | 190 |
29 | 60 | 100 | 100 | 200 |
30 | 60 | 105 | 105 | 210 |
31 | 60 | 110 | 110 | 220 |
32 | 60 | 120 | 120 | 240 |
33 | 60 | 130 | 130 | 260 |
34 | 60 | 140 | 140 | 280 |
35 | 60 | 150 | 150 | 300 |
36 | 60 | 160 | 160 | 320 |
37 | 60 | 170 | 170 | 340 |
38 | 60 | 180 | 180 | 360 |
39 | 60 | 190 | 190 | 380 |
40 | 60 | 200 | 200 | 400 |
பிரதம மந்திரி லகு வியாபாரி மான் தன் யோஜனா திட்டத்திற்கான தகுதி வரம்புகள்
இந்த திட்டத்தின் பலனை பெற விண்ணப்பதாரர் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவராகவும், சுயதொழில் செய்யும் கடை உரிமையாளராகவோ, சில்லறை விற்பனையாளராகவோ அல்லது வியாபாரியாகவோ இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வணிக ஆண்டு வருவாய் ரூ.1.5 கோடிக்கு மேல் இருக்க கூடாது. மேலும், விண்ணப்பதாரரிடம் ஆதார் அட்டை, IFSC குறியிடப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கு அல்லது ஜன் தன் கணக்கு இருக்க வேண்டும்.
பிஎம் லகு வியாபாரி மான் தன் யோஜனா திட்டத்துக்கு யாரெல்லம் விண்ணப்பிக்க முடியாது?
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அல்லது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் நடத்தப்படும் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா (PMSYM) மற்றும் பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா (PMKMY) போன்ற திட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள்.
அதேபோல், NPS, ESIC அல்லது EPFO உறுப்பினராகவோ அல்லது மத்திய அரசின் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் உறுப்பினராகவோ இருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும், வருமான வரி செலுத்துபவர்களும் இந்த திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.
பிரதம மந்திரி லகு வியாபாரி மான் தன் யோஜனா திட்டத்துக்கு தேவையான ஆவணங்கள்
இந்த திட்டத்தின் கீழ் பலனை பெற பின்வரும் ஆவணங்களின் ஸ்கென் செய்யப்பட்ட நகலை விண்ணப்பதாரர் வைத்திருக்க வேண்டும்.
பிரதம மந்திரி லகு வியாபாரி மான் தன் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) செல்லவும். மேற்கூறிய அனைத்து ஆவணங்கள் மற்றும் முதல் பங்களிப்பு தொகை ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்லவும்.
இப்போது, இந்த திட்டம் குறித்து அவர்களிடம் தெரிவித்து, தேவையான தகவல்களை வழங்கினால் ஆன்லைன் பதிவு செயல்முறையை செய்வார்கள். பின்னர், முதல் பங்களிப்பு தொகை ஆன்லைனில் செலுத்தப்பட்டு, அதற்கான ரசீது உங்களிடம் வழங்கப்படும்.
இப்போது, தனித்துவமான ஓய்வூதிய கணக்கு விண்ணப்பதாரரின் பெயரில் திறக்கப்படும். மேலும், விண்ணப்பதாரருக்கு ஒரு தனித்துவமான வியாபாரி ஓய்வூதிய அட்டை உருவாக்கப்பட்டு வழங்கப்படும். அவ்வளவு தான், தற்போது உங்களுக்கான PMLVMY அக்கவுண்ட் ஓபன் செய்யப்பட்டது.
இனி, ஒவ்வொரு மாதமும் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து PMLVMY அக்கவுண்ட்டிற்கு ஆட்டோ டெபிட் மூலம் பங்களிப்பு பணம் பற்று வைக்கப்படும்.