குழந்தைகளின் பாதுகாப்பு கருதி 2,800 நாய்களை தான் கொன்றுள்ளதாகவும், தேவைப்பட்டால் சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளதாகவும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் சட்டசபையில் பேசியுள்ளார். மத சார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்சியான எஸ்எல் போஜேகவுடா இது குறித்து சட்டசபையில் பேசியதாவது:
நாங்களும் விலங்குகள் மீது கவலை கொள்கிறோம். ஆனால், விலங்கின ஆர்வலர்கள் மற்றொரு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நாய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தினமும் டிவியிலும், நாளிதழ்களிலும் செய்தி வருகின்றன. அதனை பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிக்மகளூருவில் உள்ளாட்சி அமைப்பின் தலைவராக இருந்த போது, இறைச்சியில் ஏதோ ஒன்றை கலந்து 2800 நாய்களுக்கு கொடுத்ததாகவும், அவைகள் இறந்த பின்னர் அந்த நாய்களை தென்னை மரங்களுக்கு அடியில் புதைத்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குழந்தைகளின் பாதுகாப்புக்காக சிறைக்கு செல்ல வேண்டுமானாலும் செல்ல தயாராக இருக்கிறேன் என்று சட்டசபையில் அவர் பேசியுள்ளார். தற்போது அவருடைய இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக நாட்டில் ரேபிஸ் பாதிப்புக்கு ஆளான நிறைய பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டும் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அவஸ்தை குறித்து நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் தெருநாய்களை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவிலும் மாணவர்கள் சிலர் நாய்களால் பாதிக்கப்பட்டது குறித்த விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. அதன் மீதான விவாதத்தில் எம்எல்சியின் பேசும்போது இந்த தகவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.