தமிழக சுற்றுலாத் துறை வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. உலகளவில் 2024ஆம் ஆண்டில் சுமார் 140 கோடி பேர் சுற்றுலா பயணம் செய்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம் அதிகம். இந்திய அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை 2022இல் 81 லட்சமாக இருந்தது; 2023இல் அது 1.9 கோடியாக உயர்ந்தது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022இல் 173 கோடியில் இருந்து 2023இல் 251 கோடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி வரும் வெளிநாட்டு பயணிகள் 2022இல் 1.4 லட்சமாக இருந்த நிலையில், 2023இல் 11 லட்சமாக உயர்ந்துள்ளனர். அதேபோல், உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 2022இல் 21.8 கோடியில் இருந்து 2023இல் 28.6 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், சுற்றுலா மீது மக்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வருவது வெளிப்படுகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 2024ஆம் ஆண்டில், கடந்த ஆண்டை விட ரூ.28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. மாநிலம் முழுவதும் இயங்கும் 26 உணவகங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகள் மூலம் 2021 மே முதல் 2025 ஜனவரி வரை ரூ.129.28 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு போக்குவரத்து வசதிகள் முக்கிய பங்காற்றுகின்றன. 4000 கிலோமீட்டர் நீள ரயில் பாதைகள், நவீன சாலைகள், சென்னை, தூத்துக்குடி, எண்ணூர், நாகை உள்ளிட்ட முக்கிய துறைமுகங்கள், 17 சிறு துறைமுகங்கள் ஆகியவை இணைப்பை மேம்படுத்துகின்றன. அதோடு, சென்னை, மதுரை, திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்களும், சேலம், தூத்துக்குடி போன்ற உள்நாட்டு விமான நிலையங்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவான போக்குவரத்தை வழங்கி வருகின்றன.
இதனால், தமிழக சுற்றுலாத் துறை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வேகமாக முன்னேறி வருவதாக அரசு தெரிவித்துள்ளது.