மலையாள நகைச்சுவை நடிகர் பிஜு குட்டன் சாலை விபத்தில் காயமடைந்தார். ஏராளமான படங்களிலும், சிறிய திரை நிகழ்ச்சிகளிலும் நடித்துவரும் இவர், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ தேர்தலில் வாக்களிக்க கோயம்புத்தூரில் இருந்து காரில் கொச்சிக்கு பயணம் செய்தார்.
நேற்று காலை 6 மணியளவில், கார் பாலக்காடு அருகிலுள்ள வடக்கமுறி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியை மோதியது. மோதி நொறுங்கிய காரில் இருந்த டிரைவர் கடுமையாக காயமடைந்தார். பிஜு குட்டனுக்கு சிறிய காயம் ஏற்பட்டது.
அங்கு இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிஜு குட்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக உள்ளார். ஓட்டுநர் தீவிர சிகிச்சையில் உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.