தமிழகத்தில் இந்த கல்வியாண்டுக்கான சிறார் திரைப்பட மன்ற போட்டிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் திரைப்பட மன்றம் சார்ந்த செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்றும், அதனை அடிப்படையாகக் கொண்டு ஆகஸ்ட் 20 முதல் 22ம் தேதி வரை பள்ளி அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளில் “ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான்” என்ற தலைப்பில் 3 நிமிட சிறு படத்துக்கான கதை எழுதுதல், “பள்ளியைச் சுற்றியுள்ள மரங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் 2 நிமிட குறும்படம் உருவாக்குதல், மேலும் உங்களுக்கு பிடித்த நபரைப் போல நடித்துக் காட்டும் நடிப்பு போட்டி ஆகிய மூன்று பிரிவுகள் இடம்பெறும். பங்கேற்கும் மாணவர்களின் பெயர்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் எனவும், வெற்றியாளர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது.