குட் நியூஸ்..! எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு..!
Top Tamil News August 18, 2025 11:48 AM

தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. 2025-26 கல்வி ஆண்டிற்கான கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு இப்போது விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு முன்னெடுப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியான மாணவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள கல்வி உதவித்தொகைகள் வருடந்தோறும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2025-26 கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 15 முதல் தொடங்கி உள்ளது.

இக்கல்வி உதவித்தொகைக்களுக்கு இந்த கல்வி ஆண்டில் கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் மற்றும் 2024-25 கல்வி ஆண்டில் கல்லூரியில் சேர்ந்து விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் அவர்களின் கல்லூரிகளின் வழியாக நோடல் அலுவலரை (Nodal Officer) அணுகி UMIS -University Management Information System என்ற https://umis.tn.gov.in/இணையதளத்தில் விண்ணப்பிக்க கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே கல்லூரியில் சேர்ந்து, கல்வி உதவித்தொகை பெற்று வரும் மாணவர்கள் புதுப்பித்தலுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களின் கல்லூரியில் பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
 

தேவையான ஆவணங்கள் என்னென்ன?
இக்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு பிரிவு மாணவர்கள் சில ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். அவை,

  • மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அதற்கான வருமான சான்றிதழ் அவசியம்.
  • வகுப்பு பிரிவு சான்றிதழ் (சாதி சான்றிதழ்)
  • ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு
  • என்னென்ன உதவித்திட்டங்கள் உள்ளன?
  • மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்
  • மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்
  • உயர் கல்வி சிறப்பு உதவித்தொகை திட்டம்
  • கற்பிப்புக் கட்டணம் சலுகைத் திட்டம்
  • பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வு கட்டணங்கள் திட்டம்
  • முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவியர்களுக்கு சிறப்பு கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்கள் திட்டம்.

அரசு கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பயில்பவர்கள் இக்கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா சேவை எண் 1800-599-7638 என்ற எண்ணிற்கு அலுவலக நேரங்களில் தொடர்புகொள்ளலாம். முதலாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்துள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்லூரிகளின் வழியாக உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.