தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) சார்பில் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை பாரதிய ஜனதா கட்சி (BJP) அறிவித்துள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஜார்க்கண்ட், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிர கவர்னராக பதவி வகித்து வருகிறார்.
சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் என்ற சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அக்டோபர் 20, 1957 அன்று பிறந்தார்.
1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராதாகிருஷ்ணன் 2023 பிப்ரவரி 18 முதல் 2024 ஜூலை 30 வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், 2024 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பு) மற்றும் 2024 மார்ச் முதல் ஜூலை வரை தெலங்கானா ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பு) பணியாற்றியுள்ளார்.
தற்போது, 2024 ஜூலை 31 முதல் மகாராஷ்டிர மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி. ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ். (RSS) உடன் 1973ஆம் ஆண்டு முதல் தொடர்புடையவர். கட்சி மற்றும் அரசியல் ரீதியாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது இந்த நியமனம், தென் மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பாஜக அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் உள்ளது.
துணை ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு பிரதமர் மோடி, ஜேபி நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக சிபி ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், சிபி ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:- துணை ஜனாதிபதி வேட்பாளராக என்னை அறிவித்ததற்கு பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் மிதான நம்பிக்கைக்கும் தேசத்திற்கு சேவையாற்ற வாய்ப்பளித்ததற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது இறுதி மூச்சு உளவரை தேசத்துக்காக உழைப்பேன் என உறுதி அளிக்கிறேன்”என்று கூறியுள்ளார்.