விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், இணைய வழியில் பயிர் கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அந்த வளாகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தை நேரில் ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் சதீஸ், தருமபுரி எம்.பி மணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.அதன் பிறகு, தடங்கம் ஊராட்சியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.
விவசாயிகள் முன்பு வங்கிகளுக்கு சென்று பயிர்க்கடனுக்கு விண்ணப்பித்தால் குறைந்தபட்சம் 7 நாள் வரை ஆகும். ஆனால் இப்போது முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் கிடைக்கும்.
பயிர்க்கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகள் பயிர்க்கடன் பெற நேரடியாக தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகலாம். மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது சில தனியார் வங்கிகளின் வேளாண்மைக் கடன் பிரிவுகளை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசின் உழவன் செயலி மற்றும் சில வங்கிகளின் இணையதளங்கள் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பயிர்க்கடன் பெற நிபந்தனைகள்
பயிர்க்கடன் பெற தமிழ்நாடு விவசாயியாக இருக்க வேண்டும். சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அல்லது குத்தகைதாரர்கள் பயிர்க்கடன் பெற முடியும். மேலும் ஒரே குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயிர்க்கடன் பெற முடியும். பயிர்க்கடன் பெறும் விவசாயியின் வயது 18 முதல் 60க்குள் இருக்க வேண்டும்.ஏற்கனவே வேறு வங்கிகளில் கடன் சரியாக செலுத்தி இருக்க வேண்டும்.
ரூ.5 லட்சம் வரை பயிர்க்கடன்
தமிழ்நாடு அரசின் பயிர்க்கடன் பெற அடங்கல் அல்லது இ-அடங்கல், சிட்டா. ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை ஆவணங்களாக அளிக்க வேண்டும். ரூ.5 லட்சம் வரை பயிர்க்கடன் கிடைக்கும். ஆனால் பயிர் வகை மற்றும் சாகுபடி நிலத்தின் பரப்பளவைப் பொறுத்து இந்த தொகை மாறுபடும். கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் வட்டி மானியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.