கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் உபரி நீர் திறப்பு அதிகரிக்கும் என்றும், இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும், கேரளாவின் வயநாட்டிலும் பெய்து வரும் கனமழையால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் காவிரியில் திறக்கப்பட உள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் என்பதால், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran