24 மணி நேரத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாக சுமார் 51 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.15)அரசு விடுமுறை என்பதாலும், அதற்கடுத்த 2 நாட்கள் வார விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். மக்கள் ஒரே நேரத்தில் சாலைகளை ஆக்கிரமித்ததால் கடந்த வியாழக்கிழமை மாலை முதலே, கிளாம்பக்கம் புதிய பேருந்து நிலையம், பெருங்களத்தூர், ஜி.எஸ்.டி சாலை, செங்கல்பட்டு சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 300 போலீஸார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் விடுமுறை முடிந்து பலரும் நேற்று காலை முதல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். மத்திய மற்றும் குறிப்பிட்ட தென் மாவட்டங்களில் சொந்த வாகனங்களில் வரும் மக்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாகவே சென்னை வர வேண்டும். அந்தவகையில் தொடர் விடுமுறை முடிந்து உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி வழியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர் திரும்பியுள்ளனர். குறிப்பாக நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சுமார் 51,000 வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாக டோல்கேட் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்