போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மீண்டும் உருவாக வேண்டுமென்றால், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி கூறியுள்ளார்.
கலசப்பாக்கதில் சுற்றுப்பயணத்தின்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் மக்களுக்காக தீட்டப்பட்ட திட்டங்கள் அனைத்தும், எல்லா இல்லங்களுக்கும் போய் சேர்ந்து மக்கள் நன்மை பெற்றார்கள். அதிமுகவை பொறுத்தவரை மக்கள் தான் எஜமான்கள். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் படைத்தவர்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களோடு மக்களாக இணைந்து மிகப்பெரிய வெற்றியை அதிமுக சாதிக்கும். இன்று அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருத்துவர்கள்,செவிலியர்கள் இல்லை. திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க முடியாத அவலம் நிலவுகிறது. திமுகவில் இரவு பகலாக உழைத்து, பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்கள் எல்லால் ஓரம் கட்டப்பட்டுவிட்டார்கள். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மீண்டும் உருவாக வேண்டுமென்றால், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும்.
திமுக ஆட்சியில் பெரிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. பல லட்சம் மதிப்பில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்கப்படும். திமுக ஆட்சியில் 51 மாதங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. நான் எம்ஜிஆரும் அல்ல, அம்மாவும் அல்ல... இங்கிருக்கின்ற மக்களில் ஒருவன். மீண்டும் வெற்றிபெறுவோம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார், 2026 தேர்தலில் வெற்றி பெறுவோம். இன்னும் பல கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும், 10% தேர்தல் வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை” என்றார்.