தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-II (Group 2, 2A) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
2024-ஆம் ஆண்டு அறிவிப்பு எண் 08/2024-ஐத் தொடர்ந்து, இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 29, 2025 அன்று சென்னை-600003ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை ஆகியவை தற்போது TNPSC இணையதளமான www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது.
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல், நேரம், தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் அவற்றை தாங்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கலந்தாய்விற்கு தயாராக வேண்டும்.
மேலும், தேர்வர்கள் அழைப்பாணையை அஞ்சல் மூலம் பெறமுடியாது என்பதை தேர்வாணையம் சுட்டிக்காட்டியுள்ளது. பதிலாக, அழைப்பு குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (Email) மூலமாகவே தகவல்கள் அனுப்பப்படும்.
இது தவிர, சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவோர் அனைவரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற உறுதி வழங்க முடியாது எனவும், குறிப்பிட்ட நாளில் கலந்துகொள்ள தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்படாது என்றும் TNPSC செயலாளர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார். எனவே, தேர்வர்கள் நேரத்தை தவறவிடாமல் கலந்தாய்வில் பங்கேற்க முனைந்திட வேண்டிய கட்டாயம் உள்ளது.