அசாம் மாநிலத்தில் பலதாரத் திருமணத்தைத் தடை செய்யும் மசோதா மாநிலச் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, முதல் திருமணத்திலிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
குறிப்பாக, முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர்களுக்குக் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், கடுமையான அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இந்தத் தண்டனை இரு மடங்கு விதிக்கப்படும்.
மேலும், அத்தகைய திருமணங்களை நடத்தி வைப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.1.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று முதலமைச்சரானால், மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவேன். இது இந்த அவைக்கு நான் அளிக்கும் உறுதிமொழி” என்று தெரிவித்தார்.
பலதார மணம் செய்பவர்களுக்குக் கடுமையான சமூக மற்றும் அரசு ரீதியான தடைகள் விதிக்கப்படும் என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது. பலதார மணம் செய்பவர்கள் அரசு வேலைக்குத் தகுதியற்றவர்கள் ஆவார்கள். மேலும், அவர்களுக்கு அரசு நிதி உதவி, மானியம் ஆகியவை வழங்கப்படாது. அத்துடன், அவர்கள் பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் போன்ற எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது.
இருப்பினும், இந்தச் சட்டம் அசாமின் ஆறாவது அட்டவணைப் பகுதிகளான பழங்குடியின மக்கள் வசிக்கும் போடோலாந்து, கர்பி ஆங்லாங் மற்றும் வடக்கு கச்சார் ஹில்ஸ் ஆகிய பகுதிகளுக்குச் செல்லாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அசாம் மாநிலத்தின் சமூக மற்றும் அரசியல் தளத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.