தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் சின்னகோடு அருகே உள்ள அனந்தசகரை சேர்ந்த 11 வயதான விஸ்வ தேஜா, தனது வயதைக் கூட நம்ப முடியாத அளவுக்கு அறிவில் சிறந்த சிறுவனாக வளர்ந்து வருகிறார்.
சிறுவயதிலேயே புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டிய இவர், 4-ம் வகுப்பில் இருந்தபோதே நூலகத்தில் நேரம் செலவிட்டு வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொண்டார். அதே ஊரிலுள்ள அரசு பள்ளியில் தற்போது 7-ம் வகுப்பு படித்து வரும் விஸ்வ தேஜா, 5-ம் வகுப்பில் தான் எழுதிய முதல் புத்தகம் மூலம் எழுத்துலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
கடந்த வருடம் மட்டும் 18 புத்தகங்களை எழுதிய விஸ்வ தேஜா, இதுவரை மொத்தமாக 22 புத்தகங்களை எழுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இவரது எழுத்துகளுள் 3 புத்தகங்கள் பள்ளி பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன. விளையாட்டின் போது பார்வையை இழந்த சிறுவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நூல், மாணவர்கள் ஒழுக்கத்தைப் போதிக்கும் கதைகள், கனிம வளங்களின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் அறிவியல் விழிப்புணர்வுகளுடன் கூடிய புத்தகங்களை எழுதியுள்ளார். இச்சிறுவனின் எழுத்துத்திறனை பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.