ஆன்லைன் சூதாட்ட மசோதா எதிரொலி: பணம் கட்டி விளையாடும் போட்டிகளை நிறுத்துகிறது Dream 11!
Webdunia Tamil August 22, 2025 09:48 PM

மத்திய அரசு சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட மசோதா, பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ஒரு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்த மசோதாவின் மூலம், பணம் கட்டி விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் சூதாட்டமாகவே கருதப்பட்டு, முற்றிலுமாகத் தடை செய்யப்படுகின்றன. இந்த நடவடிக்கை காரணமாக, பிரபல ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான ட்ரீம்11, தனது தளத்தில் பணம் கட்டி விளையாடும் போட்டிகளை நிறுத்த தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ட்ரீம்11 மட்டுமல்லாது, பல ஆன்லைன் கேமிங் நிறுவனங்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த மசோதாவின்படி, இந்த நிறுவனங்கள் பணம் கட்டி விளையாடும் போட்டிகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

விளையாட்டுத் திறன் அல்லது அதிர்ஷ்டம் என பிரித்துப் பார்க்காமல், பணம் கட்டி விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் சூதாட்டமாகவே கருதப்படும் என்று இந்த மசோதா தெளிவாக கூறுகிறது. இதனால், ட்ரீம்11 போன்ற ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளும் இனி இந்தியாவில் சட்டவிரோதமானவையாக கருதப்படும்.

பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அடிமையாவது சமூகத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த சட்டம் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக பார்க்கப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.