Captain Prabhakaran: விஜயகாந்தின் 100வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் இன்று தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளிலும் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இந்த படத்தை விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்திருந்தார். திரைப்படக் கல்லூரி மாணவரான ஆர்.கே.செல்வமணி விஜயகாந்தை வைத்து இயக்கிய புலன் விசாரணை சூப்பர் ஹிட் அடிக்கவே கேப்டன் பிரபாகரனை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
சந்தன கடத்தல் வீரப்பன் போல வில்லன் கதாபாத்திரத்தை சித்தரித்து இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இருந்தார் ஆர்.கே.செல்வமணி. விஜயகாந்தின் நண்பர் சரத்குமார் வீரப்பனை பிடிக்க சென்று அவரால் கொல்லப்பட அவருக்கு என்னவானது என கண்டுபிடிக்க விஜயகாந்த் களமிறங்குவதுதான் படத்தின் கதை. இந்த கதைக்கு அசத்தலான திரைக்கதை அமைத்திருந்தார் ஆர்.கே. செல்வமணி. படம் முழுக்க காடுகளும், அதில் எடுக்கப்பட்ட ஆக்சன் காட்சிகளும் அசத்தலாக இருந்தது.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை கேரளாவை ஒட்டிய காடுகளில் எடுத்தார்கள்.
படம் துவங்கி இருபது நிமிடம் கழித்துதான் விஜயகாந்தை காட்டுவார்கள். இத்தனைக்கும் விஜயகாந்த் அப்போது பெரிய ஹீரோ. ஆனால் கதையை புரிந்து கொண்டு நடித்தார். இந்த படத்தில் அவருக்கு டூயட் இல்லை.. ரொமான்ஸ் காட்சிகள் இல்லை. ஆனாலும் செல்வமணியை நம்பி
நடித்தார். இந்தப் படத்தில்தான் மன்சூர் அலிகானை வில்லனாக அறிமுகம் செய்தார்கள். அவரும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அவருக்கும் விஜயகாந்த்க்கும் இடையே நடக்கும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஆக்சன் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருந்தது.
குறிப்பாக கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம் பெற்ற வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வசனங்களை எழுதியவர் லியாகத் அலிகான். விஜயகாந்த் பேசும் ஒவ்வொரு வசனமும் அனல் பறந்தது. குறிப்பாக நீதிமன்றத்தில் அவர் அவர் பேசும் காட்சி மற்றும் அரசியல் கலந்த வசனங்கள் ரசிகர்களிடம் கைதட்டலை பெற்றது.
இந்த படத்தில் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், ரூபினி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இரண்டு பாடல்கள்தான் என்பதால் பின்னணி இசையில் அசத்தியிருந்தார் இளையராஜா. இந்நிலையில்தான் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் இன்று தமிழகமெங்கும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை கமலா தியேட்டரில் இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. ஆச்சரியம் என்னவெனில் முதல் காட்சி ஹவுஸ்புல்லாகி இருக்கிறது.
எனவே இப்போதுள்ள இளைஞர்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டுவது தெரிகிறது. முதல் ரிலீசில் வசூலில் சாதனை படைத்த கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீசிலும் மகத்தான வெற்றியை பெரும் என்று கணிக்கப்படுகிறது.