அனிருத் இசை நிகழ்ச்சிக்கு எந்த தடையும் இல்லை- ஐகோர்ட்
Top Tamil News August 23, 2025 07:48 AM

கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் 'ஹுக்கும்' எனும் பெயரில் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டிருந்தார். பல்லாயிர கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் நடந்தது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறி இந்த இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மிகத்தாமதமாக கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது ஏன் ? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாத தகவல் இன்று காலை தான் தங்களுக்கு தெரிய வந்ததாக கூறினார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனிருத் தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி காவல்துறை விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். இசை நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்த நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.