பாடகி சுதா ரகுநாதனுக்கு சிறந்த இசைக்கலைஞருக்கான `சர்க்கிள் ஆஃப் சக்சஸ்' விருது
Vikatan August 23, 2025 07:48 AM

கலை, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை தொடர்ந்து கொண்டாடி வரும் ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி, தனது சிறப்புமிக்க சர்க்கிள் ஆஃப் சக்சஸ் - சிறந்த இசைக்கலைஞர் விருதை, பத்ம பூஷண் விருது பெற்ற ஸ்ரீமதி சுதா ரகுநாதனுக்கு வழங்கியது.

கர்நாடக இசைக்கும் சமூகத்திற்கும் சுதா ரகுநாதன் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை பாராட்டி கௌரவித்தது.

இந்த நிகழ்வில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பத்ம பூஷண் விருது பெற்றவரான என். கோபாலசாமி, ஐஏஎஸ் (ஓய்வு) தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

கர்நாடக இசையுடன் சுதா ரகுநாதனின் ஆழ்ந்த பிணைப்பை வெளிப்படுத்திய அவரது உரை நிகழ்வின் மகத்துவத்தை மேலும் உயர்த்தியது.

சர்க்கிள் ஆஃப் சக்சஸ் விருது - சுதா ரகுநாதன் இதயம் தொட்ட கௌரவம்

தனது நன்றி உரையில் ஸ்ரீமதி சுதா ரகுநாதன், "எனது இசைப் பயணம் தொடங்கிய நகரத்தில், ரோட்டரி கிண்டியிடமிருந்து இந்த கௌரவத்தைப் பெறுவது எனக்குப் பெருமையையும் நன்றியையும் அளிக்கிறது," என்றார்.

அவர் மேலும் தன்னை ஒரு கௌரவ ரோட்டேரியன் என பெருமையாகக் குறிப்பிட்டு, இந்த விருது தனது மனதில் என்றும் சிறப்பான இடம் பெறும் என்றார்.

இதயங்களை உருக்கிய இசை தருணம்

சுதா ரகுநாதன் மேடையில் "குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா" என்ற ஆன்மீகப்பாடலை பாடியபோது, அந்த தருணம் அரங்கம் முழுவதையும் உணர்ச்சியில் ஆழ்த்தி அனைவரையும் மெய் மறக்கச் செய்தது.

சர்க்கிள் ஆஃப் சக்சஸ் விருது, இடைவிடாத உழைப்பு, புதுமை மற்றும் சுய அடையாளத்தின் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் சாதனையாளர்களை கௌரவிக்கிறது.

மேலும், அவர்களின் குடும்பம், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பையும் பாராட்டுகிறது.

இவ்விருதினை இதற்கு முன் பெற்றவர்கள், மிருதங்கம் மாமேதை உமயால்புரம் கே. சிவராமன், பாடகி அனுராதா ஸ்ரீராம், விளையாட்டு வீரர் ஷரத் கமல் அசாந்தா போன்ற சாதனையாளர்கள் பெற்றுள்ளார்கள்.

சுதா ரகுநாதன்

ரோட்டரி கிண்டி தலைவர் ரோட்டேரியன் ராதா கிரிஷ் பேசுகையில், "இந்த விருது சாதனையை மட்டுமல்ல, அவர்களின் இடைவிடாத சிறப்புப் பயணத்தையும் கொண்டாடுகிறது. ஸ்ரீமதி சுதா ஜி போன்ற ஒரு பிரபலத்தை, மக்கள் மனதை வென்றவரை எங்களின் சர்க்கிள் ஆஃப் சக்சஸில் சேர்த்திருப்பது இந்த விருதின் மகத்துவத்தை மேலும் உயர்த்துகிறது," எனக் கூறினார்.

நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது நிகழ்ச்சி தலைவர் ரோட்டேரியன் ஸ்ரீகாந்த் ஆனந்தால், தொழில்முறை இயக்குநர் ரோட்டேரியன் கார்த்திகேயன் கே.எஸ்., மற்றும் கிளப் சர்வீஸ் இயக்குநர் ரோட்டேரியன் ஜெமிமா ஜெயா ஆகியோரின் துல்லியமான திட்டமிடல் மற்றும் குறைபாடற்ற ஒருங்கிணைப்பு. அவர்களின் சீரிய உழைப்பால் அந்த மாலை முழுவதும் நிகழ்ச்சி சிறப்பாகவும் தடையில்லாமல் நடைபெற்று, ஒவ்வொரு விருந்தினருக்கும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

சுதா ரகுநாதன் ரோட்டரி கிண்டி

சமூக சேவை, தலைமைத்துவம் மற்றும் தொழில்முறை முன்னேற்றத்தில் முன்னணி வகிக்கும் ரோட்டரி கிண்டி, கல்வி, சுகாதாரம், கலாச்சார வளர்ச்சி ஆகிய துறைகளில் பல சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இளம் திறமைகளுக்கும், சாதனையாளர்களுக்கும் வலுவான மேடையை வழங்கி வருகிறது.

``நீல கலர் புடவையில பிங்க் நெயில் பாலிஷ் கொட்டி, அதை மறைச்சபடியே...”- பாடகி சுதா ரகுநாதன் சுவாரஸ்யம்
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.