தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் 14 வயது சிறுவன் ஒருவன், கிரிக்கெட் பேட்டை திருடுவதற்காக 10 வயது சிறுமியை, 21 முறை கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் பைக் மெக்கானிக் தொழில் செய்து வருபவரின் மகள் சஹாஸ்ரா. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 06-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு 06 வயதில் ஒரு தம்பியும் உள்ளான்.
சம்பவ தினத்தன்று சிறுமியின் தந்தை வேலை சென்றுள்ள நிலையில், சஹாஸ்ரா வீட்டில் இருந்துள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியபோது, தனது அன்பு மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து தந்தை அதிர்ச்சியைந்து, கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு அவர் தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர். அப்போது சிறுமியின் உடலில் 21 கத்துக்குத்து காயங்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
10 வயது சிறுமியை யார் கொலை செய்தார்..? எதற்காக..? என பல கோணங்களில் விசாரணை நடத்தவும், கொலையாளியை பிடிக்கவும் காவல்துறை பல தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டது. இதில், நான்கு நாட்கள் கழித்து பக்கத்து வீட்டில் உள்ள 14 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவன், சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். ஆனால், கொலைக்கான காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து போயுள்ளனர்.
அதாவது, சிறுமியின் வீட்டில் கிரிக்கெட் பேட் இருப்பதை, திருட விரும்பினேன். பேட் திருடுவதற்காக சிறுமின் வீட்டிற்கு சென்ற போது குத்திக் கொலை செய்தேன் எனத் தெரிவித்துள்ளான். ஆனால், கிரிக்கெட் பேட்டை திருடச் சென்ற சிறுவன், ஏன் முன்கூட்டியே கத்தியுடன் சென்றான் என சந்தேகித்துள்ள போலீசார் அவனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு சாதாரண கிரிக்கெட் பேட்டுக்காக 10 வயது சிறுமியை, 14 வயது சிறுவன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.