விண்வெளியிலிருந்து இந்தியாவை பார்த்தால் எப்படி இருக்கும்? சுபான்ஷு சுக்லா வெளியிட்ட வீடியோ!
Seithipunal Tamil August 23, 2025 04:48 PM

இந்தியாவின் மனித விண்வெளி பயணத் திட்டமான ககன்யான் திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்த முதல் இந்தியராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

நாசா மற்றும் தனியார் நிறுவனம் ஆக்சியம் ஸ்பேஸ் இணைந்து செயல்படுத்திய ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ், மூவருடன் சேர்ந்து அவர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஜூன் 25 அன்று புறப்பட்ட குழு, மறுநாள் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது. அங்கு ஜூலை 15 வரை தங்கி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டது. பின்னர் அவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.

இந்த சாதனையால், சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். சமீபத்தில் அவர் இந்தியா திரும்பி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இதனிடையே, விண்வெளியில் இருந்து எடுத்த இந்தியாவின் டைம்லேப்ஸ் வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்தபோது, இந்தப் பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்தேன்.

இது இந்தியாவின் டைம்லேப்ஸ் வீடியோ. சர்வதேச விண்வெளி மையம், இந்தியப் பெருங்கடலில் இருந்து தெற்கிலிருந்து வடக்குத் திசை நோக்கி நகர்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.